Published : 23 Dec 2019 06:13 PM
Last Updated : 23 Dec 2019 06:13 PM

பிரதமர் மோடியின் 3 முழுப் பொய்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்

ஒரு கொத்துப் பொய்களைச் சொல்லியிருப்பதன் மூலம் பிரதமர் மோடி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு முயல்கிறார். இந்திய அரசமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக உள்ளடக்கத்திற்கு எதிராக அவர்கள் செய்திருக்கும் தாக்குதலை மறைக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''சி.ஏ.ஏ /என்.ஆர்.சி/என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்துவரும் தீவிர மக்கள் போராட்டங்கள் மற்றும் 10 மாநில முதல்வர்கள் என்.ஆர்.சி-ஐ அமலாக்க மாட்டோம் என அறிவித்திருப்பது ஆகியவற்றால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்தோடு நேற்று டெல்லியில் ஆற்றிய உரை பொய்யுரையாக உள்ளது.

பொய் எண் 1: "நான் 130 கோடி இந்தியக் குடிமக்களுக்கு சொல்ல விரும்புகிறேன், எனது அரசு அதிகாரத்துக்கு வந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து என்.ஆர்.சி குறித்து இன்று வரையில் ஒரு முறை கூட பேசவில்லை’’ என்று அவர் பேசினார்.

* பாஜக, 2019 ஆம் ஆண்டில் தனது தேர்தல் அறிக்கையில் நாடு முழுவதும் என்.ஆர்.சி அமலாக்கப்படும் என உறுதியளித்திருந்தது.

* நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, மக்களவையில் நவம்பர் 9-ம் தேதி அன்று, "நாடு முழுவதும் என்.ஆர்.சி கொண்டுவந்து அமலாக்குவோம், ஊடுருவிய ஒரே ஒருவரைக் கூட விட்டுவைக்க மாட்டோம்" என்று பேசினார்.

* என்.ஆர்.சி திட்டம், என்.பி.ஆர் என்ற மக்கள் தொகை பதிவேட்டு வேலைகள் (ஏப்ரல் 1 - செப்டம்பர் 30, 2020) முடிந்த பிறகு தொடங்கும். என்.பி.ஆர் என்பது என்.ஆர்.சி திட்டத்தின் முதல் கட்டம். அரசிதழில் இது கடந்த 2019 ஜூலை 31 அன்று வெளியிடப்பட்டது.

பொய் எண் 2: "நாட்டில் தடுப்பு முகாம்கள் எங்கேயும் இல்லை" என தெரிவித்தார் மோடி.

* கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலங்களவையில் உள்துறை அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு சொன்ன பதிலில், "அனைத்து மாநிலங்களிலும் சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் தண்டனை உறுதி செய்யப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டிய அந்நியர்களையும் அடைப்பதற்காக தடுப்பு முகாம்களைக் கட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர்அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, தடுப்பு முகாம்கள் கட்டுவது பற்றிய வழிகாட்டுதல்களின் தொகுப்பினை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியிருக்கிறது.

* மத்திய அரசு கடந்த நவம்பர் 28- ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில், "நம் நாட்டில் சட்டவிரோதமாக வாழும் அந்நிய தேசத்தவர்களுக்கான தடுப்பு முகாம் அமைப்பதற்கு அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு கடிதமும், 2018 ஆம் ஆண்டு அந்தப் பணிகளின் நிலை அறிய ஒரு கடிதமும் எழுதப்பட்டது" எனத் தெரிவித்தது.

* கடந்த நவம்பர் 2019 இல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது அசாம் தடுப்பு முகாம்களில் குடியேறிகளாக சந்தேகிக்கப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு அதில் 28 பேர் மரணமடைந்திருப்பதாகத் தெரிவித்தார். 988 அந்நியர்கள் அசாமில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் எண்ணிக்கையை வெளியிட்டார்.

* 2014 ஏப்ரல் 24/29 ஆகிய தேதிகளிலும், 2014 செப்டம்பர் 9/10 ஆகிய தேதிகளிலும் வழிகாட்டுதல்கள் இந்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அனுப்பப்பட்டன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதிரி தடுப்பு முகாம்கள்/தங்கும் மையம்/ முகாம் மாதிரி ஆகியவை அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களுக்கும் 2018-ல் அனுப்பப்பட்டது.

* கர்நாடகா போல பாஜக ஆட்சி செய்யும் பல மாநில அரசுகள் தடுப்பு முகாம்களைக் கட்ட உத்தரவு போட்டுவிட்டன.

பொய் எண் 3 - "நான் யாருடைய மதத்தையும் குறிப்பிட்டு பேசியதே இல்லை" என்றார் மோடி.

* ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, வன்முறையில் ஈடுபடுவோர் யார் என்பதை அவர்களுடைய உடையை வைத்துக் கண்டுபிடிக்க முடியும் என்றார்.

* 2019 பொதுத்தேர்தலில் மோடி, வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்ந்தெடுத்திருப்பதற்குக் காரணம் "பெரும்பான்மைகள் சிறுபான்மையாக உள்ள தொகுதி" என்றார்.

ஒரு கொத்துப் பொய்களைச் சொல்லியிருப்பதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்துவதற்கு மோடி முயல்கிறார். இந்திய அரசமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக உள்ளடக்கத்திற்கு எதிராக அவர்கள் செய்திருக்கும் தாக்குதலை மறைக்கிறார்.

90 நிமிடங்கள் பேசிய அவர், ஒரே ஒரு முறை கூட இந்த அரசாங்கத்தின் கொள்கைகளால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகரித்து வரும் துன்பங்களைப் பற்றிப் பேசவில்லை. நம்முடைய பொருளாதாரம் கண்கூடாக மந்த நிலைக்குச் சென்றுவிட்டது, வேலையின்மை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

விவசாயிகளிடையே விரக்தியும் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. விலைவாசி உயர்வானது மக்களின் வாழ்க்கையைத் தின்று வருகிறது. மிகக் கடுமையான விலையேற்றம் காரணமாக வெங்காயம் சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. மோடி அரசாங்கத்தின் ஒரே திட்டம், வன்முறையை வெறுப்பை வளர்ப்பதன் மூலம் மக்களிடையே மதப் பிரிவினைகளைக் கூர்மைப்படுத்துவதும் அவர்களிடையே பிரிவினை அதிகப்படுத்துவதும்தான் என்பது தெளிவாகியிருக்கிறது.

சி.ஏ.ஏ/என்.சி.ஆர்/என்.பி.ஆருக்கு எதிரான போராட்டங்கள், மோடி அரசு அதிகாரபூர்வமாக இந்த நடவடிக்கைகளை நிறுத்தும் வரை தொடரும்”.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x