Published : 23 Dec 2019 05:42 PM
Last Updated : 23 Dec 2019 05:42 PM

உள்ளாட்சித் தேர்தலில் குடும்ப உறுப்பினர்களுக்கு ‘சீட்’: மதுரை மாவட்டத்தில் கொந்தளிக்கும் அதிமுக தொண்டர்கள்

அதிமுகவில் உள்ளாட்சித் தேர்தலில் முக்கிய நிர்வாகிகள் அவர்கள் போட்டியிட முடியாத பட்சத்தில் அவர்களது மனைவி, குடும்பத்தினருக்கே ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளதால் ‘சீட்’ கிடைக்காதவர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பணிகள் முடங்கியுள்ளன.

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுகவில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 78 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 பேரும் பேரும் போட்டியிடுகின்றனர். அதுபோல், புறநகர் மேற்கு மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 8 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 88 பேரும் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்சி முக்கிய நிர்வாகிகள், அவர்கள் போட்டியிட முடியாதப்பட்சத்தில் அவர்கள் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். அதனால், கட்சியில் ‘சீட்’ எதிர்பார்த்த புதிய நிர்வாகிகள், சாதாரண நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முழுக்க பணம் பலமும், கட்சியில் செல்வாக்கும் இருப்பவர்களுக்கே ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒன்றிய செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அவர்கள் குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முறை ஒன்றிய சேர்மனாக இருந்தவர்கள் மீண்டும் அதே பதவியை குறி வைத்து களம் இறங்கியுள்ளனர். அதுபோல், கடந்த முறை மாவட்ட, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர் அல்லது அவர்கள் மனைவி, குடும்ப உறப்பினர்களை போட்டியிட வைத்துள்ளனர்.

ஏற்கெனவே கட்சியில் பதவி இருக்கும் அவர்கள் உள்ளாட்சி பதவியையும், அதிகாரத்தையும் தங்களை விட்டு போகாமல் இருக்க மீண்டும் கைப்பற்ற போட்டியிடுகின்றனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பொருளாதார பின்புலம் வேண்டும், அவர்களிடம் இருக்கிறது, உங்களிடம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது உள்ளாட்சித்தேர்தலில் அவருக்கு பயந்து ஒரளவு நியாயமாக வேட்பாளர் தேர்வு நடந்தது.

அதனால், கடைநிலை நிர்வாகிகளுக்கும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து. அவர்களும் சில நேரங்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவராக முடிந்தது. அதன் மூலம் கட்சிக்கு புதியவர்கள் வந்தார்கள். அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல் பரவலாக்கப்பட்டது. அதனால், யார் கட்சியைவிட்டு சென்றாலும் புதியவர்கள் உருவாகி கொண்டே இருந்தார்கள்.

கட்சியும் ஒவ்வொரு ஒன்றிய, நகரப்பகுதியில் பின்னடைவை சந்திக்காமல் கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியை தக்க வைத்தது. தற்போது கட்சியில் பதவிகளில் இருக்கிறவர்களுக்கே டெண்டர், வேட்பாளர் ‘சீட்’ என்று குறிப்பிட்ட நபர்களுக்கே செல்வதால் திமுகவைபோல் தற்போது அதிமுகவிலும் குடும்ப அரசியல் தலைதூக்க தொடங்கி உள்ளது.

இது கட்சிக்கு ஆபத்தாக போய் முடிந்துவிடும். கடந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்து உழைத்தால் எந்த நேரத்திலும் வேட்பாளராக்கப்படலாம், கட்சியில் பதவிகள் தேடி வரும் என்ற நிலை இருந்ததாலே புதியவர்கள் அதிகளவு கட்சியில் சேர்ந்தனர்.

அந்தநிலை தற்போது மாறிவிட்டதால் அதிமுகவில் புதியவர்கள் குறைய வாய்ப்புள்ளது. அடிமட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களுக்கான எதிர்காலம் கட்சியில் இல்லை என மன வருத்தமும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர் ’’ என்றனர்.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘திமுக பலமாக இருக்கும் வார்டுகளில் ஏற்கெனவே போட்டியிட்டு அனுபவம் பெற்றவர்களுக்கும், பணம் பலம் படைத்தவர்களுக்கும், உள்ளூர் செல்வாக்கு உள்ளவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

மற்றப்படி இளைஞர்கள், படித்தவர்களுக்கு இந்த முறை புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் சிலர் இருக்கலாம். அவர்களும் தற்போது மனமாற்றம் அடைந்து பிரச்சாரத்திற்கு வர ஆரம்பித்துள்ளனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x