

1964 டிசம்பர் புயலில் தரைமட்டமான தனுஷ்கோடி சாம்பலில் இருந்து மீண்டெழும் ஃபீனிக்ஸ் பறவைபோல் தற்போது மீண்டும் உயிர் பெற்று வருகிறது. புயல் தாக்கிய 55-வது நினைவு தினத்தை ஒட்டி தனுஷ்கோடி மீனவர்கள் தங்கள் பகுதியை உயிர்ப்பிக்க பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்கின்றனர்.
சங்ககாலம் தொட்டு தனுஷ்கோடி, தமிழகத்தின் பிரதான துறைமுகமாக விளங்கியது. மார்க்கோபோலோ, இபுன் படுடா போன்ற உலக புகழ்பெற்ற வரலாற்றுப் பயணிகள் தங்கள் பயணக்குறிப்புகளில் தனுஷ்கோடி கடற்பகுதியில் நடைபெற்ற முத்துக்குளித்தலை பற்றி எழுதியுள்ளனர்.
தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார், யாழ்ப்பாணம், கொழும்புக்கு தினசரி தோணி படகுகளின் போக்குவரத்துகள் 15-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடைபெற்று வந்தன.
சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து திட்டத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். இதன் மூலம் மன்னார் மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்ரவரி 24-ம் தேதி போட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.
டிசம்பர் 22 கோர இரவு..
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ல் புயல் சின்னம் உருவாகி டிசம்பர் 22-ல் இலங்கையை கடந்து 280 கி.மீ. வேகத்தில் இரவு 11 மணிக்கு மேல் தனுஷ்கோடிக்குள் புகுந்தது.
புயலுக்கு முன்னர் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச்சென்ற போட் மெயில் ரயிலில் புயல் மிச்சம் வைத்தது வெறும் இன்ஜினின் இரும்பு சக்கரங்களை மட்டுமே. மற்றவை அனைத்தையும் புயல் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இந்த ரயிலில் பயணம் செய்த அனைவரும் புயலுக்குப் பலியாயினர். தனுஷ்கோடியில் வசித்த ஆயிரக்கணக்கான மக்களும் உயிரிழந்தனர்.
தனுஷ்கோடி துறைமுகம், படகுத்துறை, ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், சுங்கத் துறை அலுவலகம், மருத்துவமனை, மாரியம்மன் கோயில், தேவாலயம், இஸ்லாமியர்கள் அடக்கஸ்தலம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பெரிய கட்டிடங்கள் அனைத்தும் புயலின் தாண்டவத்தில் முற்றிலும் அழிந்துபோயின.
புயல் தாக்கி 50 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் கூட தனுஷ்கோடியில் மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, சாலை, குடிநீர் வசதி என்று எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் கடலை மட்டுமே நம்பி தனுஷ்கோடியைச் சுற்றி 500க்கும் மேற்பட்ட கரைவலை இழுக்கும் மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.
புத்துயிர் பெறும் தனுஷ்கோடி..
இந்நிலையில் கடந்த 27.07.2017 அன்று ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் ரூ. 65 கோடியே 68 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
தொடர்ந்து 53 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளுக்கு அரசுப் பேருந்தும் இயக்கப்படுகிறது. தொடர்ந்து தனுஷ்கோடி தபால் நிலையமும் திறக்கப்ட்டது. மேலும் கடந்த 01.03.2019 அன்று தனுஸ்கோடிக்கு ராமேசுவரத்தில் இருந்து 17.20 கி.மீ தொலைவுக்கு ரூ.208 கோடியில் புதிய ரயில் பாதை அமைப்பதற்காக அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டினார்.
மேலும் சென்னையிலுள்ள கடல் வாணிப அமைச்சகத்தின் மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திடும் வகையில் முகுந்தராயசத்திரம் அருகே புதிதாக கலங்கரை விளக்கம் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து தனுஷ்கோடி பாரம்பரிய மீனவர் நம்புமாரி கூறியதாவது: தனுஷ்கோடியில் கரைவலை மீனவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். எங்களது 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் முறையான கட்டிட வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அதுபோல தனுஷ்கோடி மீனவ கிராமங்களில் கடந்த 55 ஆண்டுகளில் மின்சார வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், பொதுக் கழிப்பிட வசதி எதுவும் கிடையாது.
மேலும் தனுஷ்கோடியில் புயலின் போது சேதடைந்த தேவாலயம், அஞ்சல் நிலையம், துறைமுகக் கட்டிடயம், ரயில் நிலையக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே, தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகளான மின்சாரம், மருத்துவம், குடிநீர் ஏற்படுத்தவும், சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பழைய கட்டிடங்களைப் பாதுகாத்துப் பராமரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ். முஹம்மது ராஃபி