

சென்னையில் அதிக மழைநீர் தேங்கி நிற்கும் சாலைகளை கண்டறிந்து வரைபடம் தயாரித்து அங்குள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரி வருகிறது சென்னை மாநகராட்சி.
சென்னையில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை கண்டறிந்து வரைபடம் தயாரித்துள்ளது சென்னை மாநகராட்சி. சுமார் 480 இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அடையார், தேனாம்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளிலேயே அதிக இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த வரைபடத்தைக் கொண்டு மழைநீர் வடிகால்வாய்களை மாநகராட்சி சுத்தம் செய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, சென்னையில் அனைத்து மழைநீர் வடிகால்வாய்களும் சுத்தம் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கடைசியாக நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்வதற்காக புதிதாக ஒரு இயந்திரம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தைக் கொண்டு இதுவரை அல்லிக்குளம் சாலை, இளையமுதலி தெரு மற்றும் ஜி.பி.சாலையில் மழைநீர் வடிகால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
அதிகாரி விளக்கம்
இது குறித்து மாநகராட்சி அதிகாரி தெரிவிக்கும்போது, “மழைநீர் வடிகால்வாய்களில் சுமார் 5 அடி ஆழம் வரை மாசு படிந்துள்ளது. எனவே வடிகால்வாய்களில் முதலில் தண்ணீரைப் பாய்ச்சி அதன் பிறகுதான் இயந்திரங்களைக் கொண்டு அவை சுத்தம் செய்யப்படுகின்றன. ஜி.பி.சாலையில் சுமார் 12 டன் கழிவு அகற்றப்பட்டுள்ளது. வரைபடத்தைக் கொண்டு பிற இடங்களையும் கண்டறிந்து சுத்தம் செய்வோம். இதனால் பருவமழை காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்படும்” என்றார்.
கடந்த ஆண்டும் இதே போன்ற வரைபடம் தயாரிக்கப்பட்டது. மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்ய புதிதாக 10 இயந்திரங்கள் வாங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது. ஆனால், இன்னும் ஒரு இயந்திரம் கூட வாங்கப்படாததால் மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்யும் பணி மெதுவாகவே நடைபெற்று வருகிறது.