

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (டிச.23) செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், புதுவை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 24 மணிநேரத்திற்கு குமரிக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்".
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.