Published : 23 Dec 2019 12:26 PM
Last Updated : 23 Dec 2019 12:26 PM

இது பேரணி அல்ல; போர் அணி: விளம்பரத்துக்குத் துணை நின்ற அதிமுகவுக்கு நன்றி - ஸ்டாலின் பேச்சு

பேரணியில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்| படம்: ம.பிரபு

இது பேரணி அல்ல, போர் அணி என, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணியின் முடிவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து இன்று (டிச.23) ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போன்று, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பேரணி தொடங்கியது.

இந்தப் பேரணியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன், திமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் பேரணியில் கலந்துகொண்டனர்.

காலை சுமார் 10.20 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பேரணி நடைபெறும் இடத்துக்கு வந்தார். இதையடுத்து, பேரணி தொடங்கியது. பேரணியில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கூவம் கரையோரத்தை ஒட்டியுள்ள லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு வழியாக புதுப்பேட்டையைச் சென்றடைந்து அங்கிருந்து ராஜரத்தினம் திடலில் பேரணி நிறைவு பெற்றது.

இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஸ்டாலின் பேசியதாவது:

"பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. இது பேரணி அல்ல; போர் அணி. இந்தப் போர் அணியில் பங்கேற்று உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் தமிழர்களுக்கு தலைவணங்கி நன்றி சொல்கிறேன்.

இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும். உடனடியாக இச்சட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு அடுத்தகட்டப் போராட்டம் அறிவிக்கப்படும்.

இந்தப் பேரணியை எப்படியாவது நீதிமன்றம் வாயிலாக நிறுத்த வேண்டும் என ஆளும் கட்சி திட்டமிட்டது. ஆனால், ஆளும் கட்சியின் சதியை முறியடித்து, திமுகவின் பேரணிக்குத் தடையில்லை என நீதிமன்றமே சொன்னது. இந்தப் பேரணியின் விளம்பரத்திற்காக துணை நின்ற ஆளும் கட்சிக்கும் என்னுடைய நன்றி.

ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இதில் பங்கேற்று தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x