

திமுக பேரணியில், ஓசூரைச் சேர்ந்த 85 வயது முதியவர் நாராயணப்பா என்பவர் கலந்துகொண்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இன்று (டிச.23) ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போன்று, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பேரணி தொடங்கியது.
இந்தப் பேரணியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் பேரணியில் கலந்துகொண்டனர்.
காலை சுமார் 10.20 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பேரணி நடைபெறும் இடத்துக்கு வந்தார். இதையடுத்து, பேரணி தொடங்கியது. பேரணியில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கூவம் கரையோரத்தை ஒட்டியுள்ள லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு வழியாக புதுப்பேட்டையைச் சென்றடைந்து அங்கிருந்து ராஜரத்தினம் திடலில் பேரணி நிறைவு பெற்றது.
இதனிடையே, திமுகவின் இந்தப் பேரணியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சமத்துவபுரத்தைச் சேர்ந்த 85 வயது முதியவர் நாராயணப்பா கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் இப்போராட்டத்தில் கலந்துகொண்டது குறித்து பேசிய நாராயணப்பா, "ஓசூர் சமத்துவபுரத்தில் இருந்து வருகிறேன். ரயில் மூலம் இன்று காலை சென்னை வந்தேன். பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருக்கிறேன். எனக்கு 85 வயதாகிறது. கருணாநிதிக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். கருணாநிதி இல்லையென்றாலும் எங்களுக்கு ஸ்டாலின் இருக்கிறார். இருவரும் ஒன்றுதான். ஈழத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. திமுகவின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொள்வேன்" எனத் தெரிவித்தார்.
அவர் பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.