

கோவையில் வரும் 26-ம் தேதி தென்படும் வளைய சூரியகிரகணத்தைக் காண மண்டல அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட அறிவியல் அலுவலர் ஜெ.ஆர்.பழனிசாமி கூறியதாவது: சூரியனை பூமி சுற்றிவரும் பாதையுள்ள தளமும், நிலவு பூமியைச் சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு, பூமியை சுற்றிவரும் பாதை, பூமி-சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும்.
இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ, முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரியகிரகணமும், சந்திரகிரகணமும் நிகழும். நிலவு சூரியனைவிட மிகவும் சிறியது. எனினும், அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரிதாக தோன்றுகிறது. நிலவுக்கும், பூமிக்கும் உள்ள தொலைவுபோல், பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தொலைவு 400 மடங்கு அதிகம். மேலும், நிலவின் விட்டத்தைவிட, சூரியனின் விட்டமும் சுமார் 400 மடங்கு அதிகம். நிலவு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது. இதனால், பூமிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு 3,57,200 கி.மீ. முதல் 4,07,100 கி.மீ. வரை மாறுபடுகிறது. இதில் வெகுதொலைவில் நிலவு இருக்கும்போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறியதாக இருக்கும். எனவே, அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு வளையம்போல சூரியனின் வெளிவிளிம்பு கிரகணத்தின்போது தெரியும். இதையே வளைய சூரியகிரகணம் என்கிறோம். அதுபோன்ற ஒரு வளைய சூரியகிரகணம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவில் இதற்கு முன் கடந்த 2010 ஜனவரி 15-ம் தேதி வளைய சூரிய கிரகணத்தை காண முடிந்தது. வரும் 26-ம் தேதி நிகழ உள்ள வளைய சூரியகிரகணம், சவூதி அரேபியாவில் தொடங்கி கத்தார், ஐக்கிய அரசு அமீரகம், தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, மாலத்தீவு, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் தெரியும்.
வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது
கோவையில் 93 சதவீதம் சூரியனை நிலவு மறைத்துச் செல்லும். கோவை, திருப்பூர், நீலகிரியில் வளைய சூரிய கிரகணம் வரும் 26-ம் தேதி காலை 9.28 மணிக்கு தொடங்கி காலை 9.31 வரை நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். வளைய சூரியகிரகணத்தின்போது சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. எனவே, கோவை அவிநாசி சாலையில், கொடிசியா அருகே உள்ள மண்டல அறிவியல் மையத்தில் இந்த அரிய நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரகணம் தொடங்கும் காலை 8.06 மணி முதல், முடிவடையும் 11.10 மணி வரை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.