Published : 23 Dec 2019 10:03 AM
Last Updated : 23 Dec 2019 10:03 AM

கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்துக: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (டிச.23) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 600 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியடித்தனர். மேலும் மீன்பிடி வலைகளை வெட்டி எறிந்தனர். இதனால் பயந்த நிலையில் உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் மீனவர்கள் அங்கிருந்து தப்பித்துக் கரை சேர்ந்தனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது பல நேரங்களில் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அது மட்டுமல்ல இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி, மீனவர்களைச் சிறைப்பிடித்துச் செல்வதோடு, படகுகளையும் பறிமுதல் செய்கிறார்கள். இதெல்லாம் கடந்த பல ஆண்டுகளாக நீடித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அவ்வப்போது மத்திய அரசு இலங்கை அரசோடு பேசுவதும் இலங்கை அரசு மீனவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இன்னும் முழுவதுமாக இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கவில்லை அல்லது அப்படகுகளுக்கான நிவாரணத் தொகையையும் வழங்கவில்லை.

இப்படி தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதற்கு இலங்கை கடற்படையினர் தான் காரணம் என்றால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய இலங்கை அரசு உரிய நடவடிக்கையை இன்னும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை நிலை. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மத்திய அரசு இலங்கை அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை அரசால் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதை உறுதிபடத் தெரிவிப்பதோடு பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்கவோ அல்லது நிவாரணத் தொகையை வழங்கவோ வலியுறுத்த வேண்டும். குறிப்பாக கச்சத்தீவுப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

மேலும், மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x