

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த பேரணியில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அஹலே சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான முஸ்லிம்கள் தேசியக் கொடியுடன் பங்கேற்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பேரணியை தடுத்து நிறுத்தினர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.
இதேபோல், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் திருவல்லிக்கேணி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெசன்ட் நகரிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சென்னையில் இன்று நடக்கவுள்ள ‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி’ குறித்து மத்திய சென்னை முழுவதும் முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி, திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் அ.சவுந்தரராசன், பீம்ராவ் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.