மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சென்னை குடிநீர் ஏரியாக மாற்ற திட்டம்: ஒரு டிஎம்சி நீரை தேக்க முடியும் என பொதுப்பணித் துறை தகவல்

மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சென்னை குடிநீர் ஏரியாக மாற்ற திட்டம்: ஒரு டிஎம்சி நீரை தேக்க முடியும் என பொதுப்பணித் துறை தகவல்
Updated on
2 min read

மதுராந்தகம் ஏரியை தூர்வாரி ஒரு டிஎம்சி தண்ணீரை சேகரிக்கும் வகையில் கட்டமைத்து, அணையாகவும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியாகவும் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி, மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக உள்ளது. நகரின் மையப் பகுதியில் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் 2,411 ஏக்கர் நீர்பிடிப்பு பரப்பாகவும், 932.49 ச.கி.மீ. நீர்வரத்து பகுதிகளாகவும் உள்ளன. ஏரிக் கரையின் மொத்த நீளம் 3,950 மீட்டர். ஆனால், ஆக்கிரமிப்பு காரணங்களால் தற்போது 1,450 மீட்டர் நீளத்தில் மட்டுமே உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 24.30 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும்.

இந்த ஏரியின் மூலம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம், வளர்பிறை, முள்ளி, முள்கத்திரி குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் ஆகிய கிராமங்களில் மட்டும் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த மதுராந்தகம் ஏரயில், தற்போது வண்டல் மண் படிந்து தூர்ந்துள்ளதால் முழுத் திறனை இழந்துள்ளது. இதனால், ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஏரியை தூர்வாரி அணையாக பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மதுராந்தகம் ஏரி, மிகப்பெரிய நீர்வரத்து கால்வாய் மற்றும் உபரிநீர் கால்வாய் கொண்ட ஏரியாக உள்ளது. ஏரியை சுற்றி அதிக நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளதால், ஏரியை தூர்வாரி சீரமைத்து அணையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஏரியை சுற்றியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

மேலும், அணையாக மாற்றும் பட்சத்தில் கரைகளை எவ்வளவு உயர்த்த வேண்டும். எந்தெந்த கிராமப் பகுதிகள் ஏரிக்குகீழ் வரும் பகுதிகளாக கருதப்படும் போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம். மேலும், ஏரியை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடம் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

ஏரியின் கரைகளை பலப்படுத்துதல், உபரிநீர் வெளியேறும் மதகுகள், கலங்கல்கள் மற்றும் கால்வாய்களை சீரமைத்தல் மற்றும் பாசன வசதி பெறும் கிராமங்களில் உள்ள கால்வாய்களின் உறுதித்தன்மை, ஏரியில் தூர்வாரப்படும் மண்ணை கொட்டும் இடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

மேலும், ஏரியில் ஒரு டிஎம்சி தண்ணீரை தேக்கி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியாக மாற்றும் திட்டமும் உள்ளது. இதற்காக, முதற்கட்டமாக ஏரியில் தேங்கியுள்ள மண், கரைகளின் நீளம், ஏரியின் உள்ளே எந்தெந்த பகுதிகள் ஆழமாக உள்ளன போன்ற விவரங்கள் குறித்து ஏரியில் ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளோம். திட்டம் நிறைவேறினால், பாசனப் பரப்பு அதிகரித்து விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவர். மேற்கண்ட திட்டம் தொடர்பான முறையான அறிவிப்புகள் விரைவில் வரும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in