

சிறுபான்மை மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் பேரரணாக அதிமுக அரசு விளங்கி வருகிறது. அதிமுகவின் தலைவர்கள் வகுத்துத் தந்த பாதையில் ஆட்சி செய்யும் இந்த அரசு, எக்காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.
நான் முன்னரே தெரிவித்தபடி, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றபோதிலும், சிலர் தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதரர்களிடையே அவர்களது குடியுரிமை பாதிக்கப்படும் என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை நம்பவேண்டாம் என்று தமிழக மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
குடியுரிமை திருத்த மசோதா வின் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் இதை நான் நேரில் வலியுறுத்தினேன். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் எப் போதும் உறுதியாக இருக்கிறோம்.
சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் இந்த அரசு அக்கறையோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தவறான பிரச்சாரங்களுக்கு செவி சாய்க்காமல், அமைதி காக்க வேண்டும்.
அமைதிப் பூங்காவாகத் திகழும் நமது மாநிலத்தில், பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.