

தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டவுடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ''தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் ஜனவரி 4-ம் தேதி விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு பொங்கல் பரிசு வழங்கப்படும். நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு பொங்கல் பரிசு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன்படி அரசு பொங்கல் பரிசு திட்டத்தைச் செயல்படுத்தும்'' என்றார்.
முன்னதாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருக்கொட்டாரம், கொல்லுமாங்குடி, நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைச்சர் காமராஜ் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், ''மிக சாதாரணமானவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் அதிமுக. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சாதாரணமானவர்கள் வழிநடத்தும் கட்சியாக அதிமுக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதி'' என்றார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துவிட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் பகுதிகளை ஒட்டியுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடை பெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டவுடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.