Published : 22 Dec 2019 04:41 PM
Last Updated : 22 Dec 2019 04:41 PM

சென்னை - வாலாஜா சாலை சீரமைப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் 

சென்னை- வாலாஜாபேட்டை சாலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பயணித்து ஆய்வு செய்ய வேண்டும். தேவையான ஆணைகளைப் பிறப்பித்து சாலையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மதுரவாயலுக்கும், வாலாஜாபேட்டைக்கும் இடைப்பட்ட பகுதி சரி செய்யப்பட்டிருப்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மூத்த வழக்கறிஞர் ஒருவரை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இந்தியாவின் மிக நீண்ட சாலையை சீரமைக்கும் நோக்குடன் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள இம்முடிவு வரவேற்கத்தக்கது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயணா, தமது பயண அனுபவத்தின் அடிப்படையில் சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அது குறித்து உயர் நீதிமன்றமே பொதுநல வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதியரசருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து பதிவு செய்த பொதுநல வழக்கை விசாரித்த நீதியரசர்கள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு இம்முடிவை எடுத்திருக்கிறது.

சென்னை - வாலாஜா சாலை சீரமைக்கப்பட வேண்டும் என்பதை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுபற்றி 25.07.2017, 17.07.2018 ஆகிய தேதிகளில் விரிவான அறிக்கைகளை வெளியிட்டது மட்டுமின்றி, அப்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் பலமுறை வலியுறுத்திருக்கிறேன். இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், சாலையை முழுமையாக சீரமைக்கும் வரை அச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தி வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் முன் கடந்த நவம்பர் 14-ம் தேதி பாமக சார்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கெல்லாம் மேலாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தற்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடந்த டிசம்பர் 7-ம் தேதியன்று, உயர் நீதிமன்ற எச்சரிக்கையை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன்.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் சென்னை- வாலாஜா சாலை பிரச்சினையை உயர் நீதிமன்றம் கையில் எடுத்த பிறகு தான் அதற்குத் தீர்வு காண்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உயர் நீதிமன்றம் இது குறித்துத் தானாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கிய பிறகு, அந்த நெடுஞ்சாலை ஓரளவு பழுது பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், மதுரவாயல் பாரிவாக்கம் சந்திப்பு பாலம் அருகில் சாலையையே காணவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளே கூறும் அளவுக்கு தான் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. இன்னும் பல இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் தென்படுகின்றன.

2004-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தச் சாலை அதன்பிறகு கடந்த 15 ஆண்டுகளில் ஒருமுறை கூட, மீண்டும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்பது அந்தச் சாலையில் சுங்கவரி செலுத்தி செல்லும் மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்பது மட்டுமின்றி, அலட்சியத்தின் உச்சகட்டமும் ஆகும். அதேபோல், சென்னை - வாலாஜாபேட்டை சாலையில் உயர் கோபுர மின்விளக்குகளை அமைப்பது குறித்து மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு பல முறை கடிதம் எழுதியும் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று தமிழக அரசும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

சாலையைச் சீரமைக்கும் விஷயத்தில் மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அலட்சியம் காட்டுவதையும், இந்தச் சாலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை என்பதையுமே இது காட்டுகிறது.

சென்னை - வாலாஜாபேட்டை சாலையின் தரத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகும். அவரது ஆய்வுக்குப் பிறகு தேவைப்பட்டால் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் சென்னை- வாலாஜாபேட்டை சாலையில் பயணித்து ஆய்வு செய்ய வேண்டும். தேவையான ஆணைகளைப் பிறப்பித்து சாலையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x