இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு: கருணாநிதி நம்பிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு: கருணாநிதி நம்பிக்கை
Updated on
1 min read

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையொட்டி, அங்கு தமிழர்களின் நெடுங்காலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டணி, 45.7 சதவீத வாக்குகளைப் பெற்று 93 இடங்களிலும், ராஜபக்சவின் இலங்கை சுதந்திரக் கட்சிக் கூட்டணி 42.4 சதவீத வாக்குகளைப் பெற்று 83 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டணி 14 இடங்களில் பெற்றி பெற்று, இலங்கையில் மூன்றாவது பெரும் கட்சிக்குரிய இடத்தைப் பெற்றிருப்பது முக்கியமானதொரு திருப்பமாகும்.

இந்தத் தேர்தலைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் அதிபராக இருந்த ராஜபக்ச, இந்தப் பிரதமர் தேர்தலிலும் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பினை இழந்துள்ளார் எனினும் அவருடைய கட்சி 83 இடங்களிலே வெற்றி பெற்றுள்ளது. தற்போது அதிபராக உள்ள மைத்ரிபால சிறிசேனா அறிவித்த 20வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, இலங்கை விரைவில் அதிபர் ஆட்சி முறையிலே இருந்து மாறி, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் திரும்பும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றி, புதிய பிரதமர் எடுக்கும் முடிவுகளை வடிவமைத்திடக் கூடிய நிலையில் அமைந்துள்ளதால், ஈழத் தமிழர்களின் நெடுங்காலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுத்துச் செல்வதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியிருக்கின்றது என நம்பலாம்.

எனவே இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குச் சம உரிமைகளுடன் கூடிய கண்ணியமான அமைதியான நல்வாழ்வு அமைந்திட வேண்டுமென்ற நம்முடைய நீண்ட நாள் எண்ணம் நிறைவேறத்தக்க அளவுக்கு தற்போது அமையவுள்ள நாடாளுமன்றத்திலாவது ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டு புதிய விடியலுக்கு வழி ஏற்படும் என்ற விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in