

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான திமுகவின் பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் என்று அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் சென்னை அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதில் வாக்களிக்க வந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மத, இன வேறுபாடின்றி சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் இந்த நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தது தவறானது. இந்தியாவில் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இங்கு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கல்ல.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் போராடுவது தவறு அல்ல. மாணவர்கள் ஜனநாயகத்தின் ஓர் அங்கம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள திமுகவின் பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார். அவர் தற்போது சென்னையில் இல்லை. கர்நாடகத்தில் படப்பிடிப்பில் உள்ளார்’’.
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.