Published : 22 Dec 2019 11:15 AM
Last Updated : 22 Dec 2019 11:15 AM

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை: பரிசீலனை செய்வதாக முதல்வர் பழனிசாமியிடம் அமித் ஷா உறுதி 

முதல்வர் பழனிசாமி - உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்பு.

சென்னை

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்தார். இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், உரிய நேரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்துள்ளார். இதனை
அதிமுகவின் 'நமது அம்மா' நாளிதழ் உறுதிப்படுத்தியுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக அமித் ஷா உறுதி அளித்துள்ளார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி கடந்த 19-ம் தேதி டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை முன்னரே வலியுறுத்தியதையும், அந்த நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதையும் முதல்வர் பழனிசாமி அமித் ஷாவிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும். உரிய நேரத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அமித் ஷா உறுதி அளித்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகள் அரசியல் காரணங்களுக்காகவே போராட்டம் நடத்தி வருகின்றன. திமுக நாளை நடத்தும் பேரணியால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x