

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் சட்டம்-ஒழுங்கை சீரழித்து அதன் மூலம் குளிர்காய எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம் சாட்டினார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியப் பகுதியில் உலகாணி, கூடக்கோவில், குராயூர், சிவரக்கோட்டை ஆகிய கிராமங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து முன்மாதிரி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அதிமுக தலைமையில் அமைந்துள்ளது வெற்றிக்கூட்டணி.
திமுக தலைவர் தினமும் ஒரு பொய் பிரச்சாரத்தை பரப்புகிறார். இது மக்களிடம் எடுபடவில்லை. அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் அரசுக்கு எதிராக 32,000 போராட்டங்களை நடத்தினார். அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் அவரது முயற்சி எடுபடாது.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும்போது யாருக்காவது பாதிப்பு இருப்பது தெரிந்தால் உரிய தீர்வு காணப் படும் எனப் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர். இச்சட்டம் குறித்த கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கலாம் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாருக்குமே பாதிப்பு இருக்காது என எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், மக்களைப் பிளவுபடுத்தி அதன் மூலம் சட்டம்-ஒழுங்கை சீரழித்து குளிர்காய நினைக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் உள்ளாட்சித் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பாஜக மாநிலச் செயலாளர் ஆர்.னிவாசன் பேசுகையில், குடியுரிமை சட்டம் நாட்டுக்குப் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தே அதிமுக ஆதரவு தந்தது. இச்சட்டம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது.
மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. சிறுபான்மை வாக்குகளையாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக போலி அரசியல் நடத்துகிறார் என்றார். பிரச்சாரத்தில் பாஜக, தேமுதிக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.