

ஜெர்மன் நாட்டைப் போன்று இந்தியாவை மாற்றும் முயற்சியை தடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா அருகே ஜமா அத்துல் உலமா பேரவை சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: இந்தியாவில் 40 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. நான் பட்டியலிட்ட எந்த ஒரு பிரச்சினைக்கும் பாஜக தீர்வு காணவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய இறையாண்மைக்கும், அரசுக்கும் இடையேயான போராட்டம். குடிமகன் என்பதற்கு நிலத்தில் வாழ்வதே சாட்சி. நாட்டில் ஒருவன் குடிமகன் இல்லை என்றால் அதை அரசுதான் நிரூபிக்க வேண்டும், மக்கள் நிரூபிக்க மாட்டார்கள்.
இந்திய நாட்டை ஜெர்மன் நாடாக மாற்றுவதற்கு பாஜக இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. அதை நாம் தடுக்க வேண்டும். இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்றால் இலங்கை இந்துக்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை?. கிறிஸ்தவர்களை சேர்த்துள்ளோம் என்று கூறும் மத்திய அரசு, பூடான் கிறிஸ்தவர்களை ஏன் புறக்கணித்தது?.
அதிமுக செய்த வரலாற்றுத் துரோகத்தை ஒருபோதும் யாரும் மறக்கக்கூடாது. இந்த வரலாற்றுத் துரோகத்தை நிதிஷ்குமாரும் செய்தார். தற்போது, அவர் மனசாட்சி உறுத்தியதால் மறுபரிசீலனை செய்துள்ளார் என்றார்.
ஜமா அத்துல் உலமா பேரவையின் தலைவர் எஸ்.சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் திருச்சி சு.திருநாவுக்கரசர், சிவகங்கை கார்த்தி சிதம்பரம், ராமநாதபுரம் கே.நவாஸ் கனி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி சிவ.வீ.மெய்யநாதன், திருமயம் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.