

சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவலாசிரியர் டி.செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு மதுரை மருத்துவமனையில் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம், தென்கலம் கிராமத்தில் பிறந்த டி.செல்வராஜ் (87) திண்டுக்கல் நகரில் வசித்துவந்தார். பி.எல். பட்டம் பெற்ற இவர், சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். தாமரை, ஜனசக்தி இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றிஉள்ளார். இவர், 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 70-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி உள்ளார்.
2012-ம் ஆண்டு இவரது படைப்பான ‘தோல்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
திண்டுக்கல் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து இந்த நாவலில் அவர் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். உடல்நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு காலமானார்.
திண்டுக்கல்லில் நேற்று நடந்த இறுதி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.