Published : 22 Dec 2019 08:21 AM
Last Updated : 22 Dec 2019 08:21 AM

உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் கடலூர் துணை ஆட்சியரை தாக்கிய அதிமுக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது தேர்தல் அலுவலராக செயல்பட்ட துணை ஆட்சியரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. 27-ம் தேதி கடலூர் ஒன்றியத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே கடந்த 19-ம் தேதி கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் இறுதிப் பட்டியல் வெளியிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். 14-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பிரியதர்ஷினி கணேஷ், 21-வது வார்டுக்கு அதிமுக சார்பில் குமுதம் சேகர் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுவின் அடிப்படையில் பிரியதர்ஷினி கணேஷ்குமார், குமுதம் சேகர் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திமுக கூட்டணியின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுபாஷினி ஸ்ரீனிவாசன் 14-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும், செல்வி சுபாஷ் 21-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களுக்கு திமுகவின் உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அன்று இரவு ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்ற கடலூர் ஒன்றிய அதிமுக செயலாளர் பழனிசாமி, நிர்வாகி சேகர் மற்றும் சிலர் ஆவேசமாக, 'விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு திமுக சின்னத்தை ஏன் ஒதுக்கினீர்கள்' என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனே அங்கிருந்த துணை ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான அருளரசன், "உதவி தேர்தல் அலுவலர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதை மாற்ற முடியாது' என்று கூறியுள்ளார்.

இதில் ஆவேசம் அடைந்த அதிமுகவினர் தேர்தல் அலுவலர் அருளரசனைக் கடுமையாகத் தாக்கி, அவரது இருக்கையிலிருந்து வெளியே இழுத்துள்ளனர். அவர் உடனே அடுத்த அறைக்கு சென்று பதுங்கிக் கொண்டார். இதைக் கண்டு அங்கிருந்த சக தேர்தல் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திமுக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் குவிந்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினருக்கு குலையுடன் கூடிய தென்னமர சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சமூகவலைதளங்களிலும், மின் ஊடகங்களிலும் விடியோ வெளியானது. இதுகுறித்து தேர்தல் அலுவலர் அருளரசன், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் பேரில் நேற்று, கடலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் பழனிசாமி, நிர்வாகி சேகர் மற்றும் சிலர் மீது கொலை மிரட்டல், அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x