Published : 22 Dec 2019 08:17 AM
Last Updated : 22 Dec 2019 08:17 AM

திருவள்ளூர் அருகே துணிகரம்: நாட்டு வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவரை மர்ம கும்பல் ஒன்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தது. பழிக்குப் பழியாக இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் நேற்று காலை இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். வழியில் பன்னூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அங்கு வேகத்தடை இருந்ததால் பைக்கை மெதுவாக இயக்கினர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் திடீரென இளைஞர்கள் இருவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடித்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி இருவரும் நிலைகுலைந்து சாலையில் விழுந்தனர். அப்போது அந்த மர்ம கும்பல் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியது.

இதில் இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தக் கொலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால், மர்ம கும்பல் அரிவாளால் பொதுமக்களை மிரட்டி விட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்றனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் காஞ்சிபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் கோபி(23) மற்றும் அவரது நண்பரான பாபு என்பவரின் மகன் மார்க்க ஜீவா(22) என தெரியவந்தது.

கொலைக்கான காரணம்

கொலை கும்பல் சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்தே இளைஞர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து, கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியான ஸ்ரீதரை சுட்டுப் பிடிக்க போலீஸார் ரகசியமாக திட்டமிட்டனர். இதை அறிந்த ஸ்ரீதர் கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டுக்கு தப்பிச் சென்று தற்கொலை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து அவர் இடத்தை யார் பிடிப்பது என்பது தொடர்பாக ஸ்ரீதரின் உறவினர் தணிகாசலத்துக்கும், அவரது கார் ஓட்டுநர் தினேஷுக்கும் இடையில் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த அதிகாரப் போட்டி தொடர்பாக, 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தன.

இந்நிலையில், கடந்த 2017-ல் தணிகாசலம் கூட்டாளிகள் தினேஷ் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே முயற்சித்தனர். இந்த விபத்தில் தினேஷ் உயிர் தப்பினார்.

இதையடுத்து, தணிகாசலம் கூட்டாளிகளுக்கு நெருக்கமாக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமார் என்பவரை கடந்தாண்டு பிள்ளையார்பாளையத்தில் தினேஷ் கூட்டாளிகள் தாக்கினர். இதில் வெட்டுக் காயங்களுடன் சிவகுமார் உயிர் பிழைத்தார். இந்த வழக்கில் தினேஷ் கூட்டாளிகள் நான்கு பேர்

அப்போது கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் செய்யாறில் ஓடும் பேருந்தில் கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார், இந்த நான்கு பேரில் ஒருவர் எனக் கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் தமக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதிய சதீஷ்குமார் செய்யாறில் சில நாட்களாக வசித்து வந்தார்.

பழிக்குப்பழியாக சம்பவம்

இதை அறிந்த மர்ம கும்பல் தனியார் பேருந்தில் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை செய்த ஆட்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தணிகாசலத்தின் கூட்டாளிகள் என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

அதன்பிறகு தணிகாச்சலத்தின் பைனான்சியரும், ரவுடி ஸ்ரீதரின் நெருங்கிய உறவினருமான கருணாகரன் அவருடைய அலுவலகத்தில் வைத்து தினேஷின் கூட்டாளிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், செய்யாற்றில் ஓடும் பேருந்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சதீஷ்குமார் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே கோபி, ஜீவா இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x