Published : 21 Dec 2019 06:16 PM
Last Updated : 21 Dec 2019 06:16 PM

மதுரையில் உள்நாட்டு வெங்காயம் கிலோ ரூ.100; எகிப்து வெங்காயம் ரூ.130-க்கு விற்பனை: அமைச்சர் ஊரிலேயே குறையாத விலை

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் சொந்த ஊரான மதுரையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100 ஆகவும், விலை உயர்வை குறைக்க இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் ரூ.130 என்றளவிலும் விற்கிறது.

அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் அமைச்சர் ஊரிலேயே வெளிநாட்டு வெங்காயம் இறக்குதியானப் பிறகும் வெங்காய விலை உச்சத்தில் இருக்கிறது.

தமிழகம் மட்டுமில்லாது நாடு முழுவதுமே பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மழையால் புதிய வெங்காயமும் சந்தைகளுக்கு வரவில்லை. அதனால், தமிழகத்தில் சின்ன வெங்காயம் கடந்த மாதம் கிலோ ரூ.180-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.150-க்கும் விற்றது.

தமிழகத்தின் பிற நகரங்களிலும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் விற்கப்பட்டது. வெங்காய விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் எகிப்து வெங்காயத்தை இறக்குதி செய்தன.

தற்போது இந்த வெங்காயம், தமிழக வெங்காய சந்தைகள் மட்டுமில்லாது காய்கறி சந்தைகளிலும் எகிப்து வெங்காயம் அதிகளவு விற்பனைக்கு வந்துவிட்டன. அதனால், சென்னை, திருச்சி, சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வெங்காயம் விலை குறைந்து வருகின்றன.

ஆனால், கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் கே.ராஜூவின் சொந்த ஊரான மதுரையில் மட்டும் இன்னும் பெரிய வெங்காயம் விலை உச்சத்தில் விற்கிறது. ஒரு கிலோ உள்நாட்டு வெங்காயம் ரூ.90 முதல் ரூ.100க்கும், வெங்காயம் விலையை குறைக்க இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் கிலோ ரூ.130-க்கும் விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உள்நாட்டு வெங்காயம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘உள்நாட்டு வெங்காயம், தற்போதுதான் அறுவடை செய்து விற்பனைக்கு வந்துள்ளது. அவை தற்போதைய காலநிலைக்கு சில நாட்களில் அழுகிவிடுகிறது. தரமில்லாமல் சிறுத்துப்போய் உள்ளது. ஆனால், எகிப்து வெங்காயம், பழைய வெங்காயம். அதை நீண்ட நாட்கள் வைத்திருந்து சமையலுக்கு பயன்படுத்தலாம். அதனால், எகிப்து வெங்காயத்திற்கு வரவேற்பு கூடியுள்ளதால் அதன் விலையை வியாபாரிகள் தங்கள் சுயலாபத்திற்காக கூட்டி விற்கிறார்கள்.

உள்நாட்டு வெங்காயத்தை அதைவிட குறைவாக விற்கிறார்கள். மொத்தத்தில் வெங்காயம் விலை குறைந்துவிட்டது. ஆனால், மதுரையில் வியாபாரிகள் செயற்கையான விலையேற்றத்தையும், தட்டுப்பாட்டையும், உருவாக்கி எகிப்து வெங்காயத்தை விலை கூடுதலாக விற்கிறார்கள், ’’ என்றார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஊரிலே அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் விலை குறைக்க இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் விலை கூடுதலாக விற்பது பொதுமக்கள் அதிருப்தியையும், உள்ளாட்சித்தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மாட்டுத்தாவணி சென்டரல் மார்க்கெட் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி முருகன் கூறுகையில், ‘‘உள்நாட்டு பெரிய வெங்காயம் கிலோ ரூ.90 ரூபாய்தான் விலை. ஆனால், சிலர் ரூ.100-க்க விற்கலாம். எகிப்து வெங்காயம், விலை கூடுதலாகத்தான் விற்கிறது. உள்நாட்டு வெங்காயம் தற்போது வர ஆரம்பித்துள்ளது. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாமல் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு சந்தைகளுக்கு வருவதால் விலை குறையத்தொடங்கி உள்ளது. ஆனால், எகிப்து வெங்காயம், தரமாக இருப்பதால் உள்நாட்டு வெங்காயத்தைவிட கூடுதலாக விற்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x