கருணாநிதி எந்தத் தேர்தலையும் எதிர்கொள்வார்; ஸ்டாலினோ அஞ்சுகிறார்: செல்லூர் ராஜூ கிண்டல்

கருணாநிதி எந்தத் தேர்தலையும் எதிர்கொள்வார்; ஸ்டாலினோ அஞ்சுகிறார்: செல்லூர் ராஜூ கிண்டல்
Updated on
1 min read

"கருணாநிதி எந்தத் தேர்தல் வந்தாலும் சந்திப்பார். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் தேர்தலை சந்திக்கப் பயப்படுகிறார்" என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள பெரிய ஆலங்குளத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நிலையூர் முருகனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (சனிக்கிழமை) பிரச்சாரம் செய்தார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் விவி ராஜன் செல்லப்பா, தேமுதிகவைச் சேர்ந்த கணபதி , மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்தின்போது பேசிய அமைச்சர் செல்லூர் கே ராஜு, "ஒவ்வொரு ஒன்றிய பகுதியிலும் மதுரையில் ரூ.2 கோடி அளவில் சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும்.

ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக பயப்படுகிறது என்று கூறினார். ஆனால் அவரே உள்ளாட்சித் தேர்தலை தடுக்க பல வழிகளில் முயன்றார். அவர் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திராணியில்லாமல் பல்வேறு அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கருணாநிதி இருந்த போது எந்தத் தேர்தல் வந்தாலும் சந்தித்தார். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் தேர்தலை சந்திக்க பயப்படுகிறார். இதன்மூலம் திமுக கழுதையாக இருந்து தற்போது கட்டெறும்பாக தேய்ந்துவிட்டது என்பது தெரிகிறது. திமுக அழிவின் நிலைக்கு சென்றுள்ளதையே இது காட்டுகிறது.

இன்றைக்கு இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றி ஸ்டாலின் பேசி வருகிறார். திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தபோது 4 மத்திய அமைச்சர்களை பெற்றது. அப்போது, இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்ற பொழுது வாய் திறக்காமல் மவுனியாக இருந்து தமிழகத்திற்கு பெரும் துரோகத்தை செய்தது. இதையெல்லாம் மக்கள் மறக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அடுத்த வரவுள்ள 2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாரம் ஆகும்"
இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in