Published : 21 Dec 2019 05:28 PM
Last Updated : 21 Dec 2019 05:28 PM

தமிழகம் முழுவதும் விரைவில் சைபர் காவல் நிலையங்கள்: ஏடிஜிபி ரவி பேட்டி

கோவை

சைபர் குற்றங்களை விசாரிக்க தனிப் பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் வருங்காலத்தில் சைபர் குற்றங்களுக்கான காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் அதிகமாக இருக்கும் என கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்துகொண்ட இணையதளப் பாதுகாப்பு வழிமுறை குறித்த கருத்தரங்கம் கோவையில் இன்று நடைபெற்றது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''இணையதளப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கருத்தங்கம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்துகொண்டுள்ளார். இதில் நெட்வொர்க் செக்யூரிட்டி, சைபர் செக்யூரிட்டி குறித்து ஆலோசித்துத் தீர்வு சொல்வார்கள். அதற்காகத்தான் இந்தக் கருத்தரங்கம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கூடுதல் டிஜிபி ரவி பதில் அளித்தார்.

ஆபாசப் படங்களைப் பதிவிடுபவர்கள் மீது என்ன நடவடிக்கை?

ஆபாச வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கியுள்ளோம். பல இணையதளங்களை அழித்துவிட்டோம். ஆபாச இணையதளங்களை அழிக்க சேவை வழங்குநர்களுக்கு (சர்வீஸ் ப்ரொவைடர்களுக்கு) எழுதியுள்ளோம். அவர்கள் அதை அழித்து வருகிறோம்.

நாடு முழுவதும் இப்படி செல்கிறது. தடுக்க என்ன வழி?

பெரும்பாலான இணையதளங்களை அழித்துவிட்டோம். பலவற்றை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக டீப் வெப் எனப்படும் இணையதளத்தில் உள்ள பதிவுகளை அழிக்கவும் முயற்சி எடுத்து வருகிறோம்.

சென்னை, கோவை குற்றம் குறைவாக இருக்கும் நகரம் என்பதை எப்படிச் சொல்கிறீர்கள்?

அது சர்வே அடிப்படை. குற்றங்கள் குறித்த புள்ளிவிவர அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவிலேயே சென்னை, கோவை நகரங்கள் குற்றம் குறைவாக நடக்கும் நகரமாக உள்ளது.

சைபர் போலீஸ் ஸ்டேஷன் வர வாய்ப்புள்ளதா?

ஆமாம். சைபர் காவல் நிலையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வர உள்ளது. தற்போது சைபர் குற்றங்களுக்காக ஏடிஜிபி தலைமையில் ஒரு பிரிவே சைபர் க்ரைமுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு காலமாகும்?

இன்னும் 6 மாதங்களில் அது கண்டிப்பாக வந்துவிடும்.

அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

சைபர் குற்றங்களை விசாரிக்கும் காவல் அமைப்பாக, தனி போலீஸ் ஸ்டேஷனாக இருக்கும். வருங்காலத்தில் அனைத்து ஸ்டேஷன்களும் சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன்களாக மாறிவிடும். ஏனென்றால் வருங்காலத்தில் சைபர் சார்ந்த குற்றங்கள் அதிகரிக்கும். சொல்ல முடியாது சைபர் நீதிமன்றங்கள்கூட அமையும்.

ஆபாசப் படத்தில் கண்டறியப்பட்ட நபர்கள் எத்தனை, வெப்சைட்கள் எத்தனை?

நூற்றுக்கணக்கான இணையதளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏராளமானோர் லிஸ்ட் எடுத்து அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்க அனுப்பியுள்ளோம். நடவடிக்கைகள் எடுப்பதில் போலீஸார் பாகுபாடு காட்டவில்லை. யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x