

தமிழகத்தில் 3 தலைமுறைகளாக குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலுள்ள தமிழர்களை இன்று (சனிக்கிழமை) அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு வந்த இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது கண்டனத்துக்குரியது.
அண்டை நாடுகளில் இருந்து வரும் அகதிகள் அனைவருக்குமே குடியுரிமை கொடுக்கவேண்டும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதற்கான இந்த சட்டத் திருத்தம் பாரபட்சமாக இருக்கிறது. இது மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக்கூடியது.
தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழர்கள் கடந்த 3 தலைமுறைகளாக இங்கு வசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். அகதிகள் முகாம்களில் உள்ள இளைஞர்கள் படித்திருந்தாலும் அவர்கள் வேலைவாய்ப்பு பெற குடியுரிமை கட்டாயமாக தேவைப்படுகிறது.
அவர்களின் குடியுரிமைக்கு நாங்கள் வலியுறுத்தும்போது அரசோ இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசை கேட்டுள்ளோம் என்று கூறுகிறது. இது ஏற்புடையது அல்ல. நியாயமாக அதிமுக அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்திரு்கக வேண்டும்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணி தமிழக வரலாற்றிலேயே நடந்திராக ஒரு பேரணியாக இருக்கும்.
பொருளாதார வீழ்ச்சியில் மீளமுடியாத நிலையில் இந்தியா போய்க்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் .ஆர்எஸ்எஸின் இலக்கை நோக்கி மத்திய அரசு பயணித்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க நினைக்கிறது. இந்திய நாடே இந்தச் சட்டத்தை எதிர்த்து பற்றி எரியக் கூடிய நிலையில் உள்ளது. ஆனால் மத்திய அரசோ அடக்குமுறையை கையாண்டு மக்கள் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது.
அவ்வாறு செயல்பட்டால் போராட்டத்தின் வீரியம் அதிகமாகும். இந்திய மக்கள் பிரிட்டிஷ்காரர்கள் அடக்குமுறையை சந்தித்தவர்கள். 132 கோடி மக்கள் களத்தில் இறங்கினால் இந்திய ராணுவமும் போலீஸாரும் மக்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.