Last Updated : 21 Dec, 2019 04:56 PM

 

Published : 21 Dec 2019 04:56 PM
Last Updated : 21 Dec 2019 04:56 PM

சாலையோர வியாபாரிகளுக்குக் கை கொடுக்கும் உள்ளாட்சித் தேர்தல் சின்னங்கள்

உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு பகுதியிலும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களைக் கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் வேட்பாளர்களுக்கு 30 வகையான சின்னங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை வாக்காளர்களின் மனதில் பதிய வைக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் கண் கண்ணாடி சின்னம் ஒதுக்கப்பட்ட வேட்பாளர்கள், சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் கண் கண்ணாடி விற்பனையாளர்களை அணுகி, மொத்தமாக ஆயிரம், இரண்டாயிரம் என வாங்கி வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அதேபோன்று கத்தரிக்காய் சின்னம் ஒதுக்கப் பெற்றவர்கள், கத்தரிக்காய்களை வழங்கி வருகின்றனர். தொப்பி சின்னம் ஒதுக்கப்பெற்றவர்கள், தொப்பிகளை மொத்தமாக வாங்கி விநியோகித்து வருகின்றனர். இதுபோன்று எளிதில் மிகக் குறைவான விலையில் விற்பனையாகக் கூடிய பொருள்களை சின்னங்களாகப் பெற்றவர்கள், அவற்றை மொத்தமாக வாங்கி வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில், பண்ருட்டி-திருக்கோயிலூர் சாலையில், நகராட்சி அலுவலகம் அருகே சாலையின் இருபுறமும் இரும்பு மற்றும் தகட்டிலான வீட்டு உபயோகப் பொருள்கள் தயார் செய்யும் தட்டான்பட்டறை உள்ளது. இந்தப் பட்டறைகளில் தற்போது சின்னம் தயார் செய்யும் பணிகளில் அதன் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை கிராமங்களில் வரைந்திடவும், தேர்தல் பணிகளை விரைவுபடுத்த சுவர்களில் சின்னங்கள் வரைவதற்கான தகடுகளில் சின்னம், வேட்பாளர் பெயர் பொறித்த தகடுகள் ஆர்டர் செய்ததைத் தொடர்ந்து, அவற்றைத் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 3 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட தகடுகள் ரூ.1200 முதல் ரூ.1500 வரை தகடுகளுக்கு ஏற்ப விற்பனை செய்து வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x