Last Updated : 21 Dec, 2019 03:14 PM

 

Published : 21 Dec 2019 03:14 PM
Last Updated : 21 Dec 2019 03:14 PM

30 டன் ரேஷன் சர்க்கரையுடன் கிணற்றில் மூழ்கிய லாரி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிக்கு வந்த போது விபத்து  

நெல்லையில் 30 டன் ரேஷன் சர்க்கரையுடன் லாரி ஒன்று கிணற்றில் மூழ்கியது. தண்ணீரில் முழுமையாக மூழ்கிய கனரக லாரியை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் அருகே உள்ள மோகனூர் அரசு சர்க்கரை ஆலையில் இருந்து 30 டன் சர்க்கரை ஏற்றி வந்த கனரக லாரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிக்கு கொண்டு வரப்பட்டது.

லாரியை திண்டுக்கல் நெல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு கிட்டங்கிக்கு வந்துள்ளார். காலை 10 மணிக்கு மேல்தான் குடோனுக்கு லாரி செல்ல முடியும். எனவே லாரியை நிறுத்திவிட்டு உறங்கி உள்ளார். காலை 8 மணி அளவில் எழுந்து குடோனுக்குச் செல்வதற்காக தயாராகும் போது லாரி ஒரு புறமாகச் சரிந்து நின்றுள்ளது.

உடனடியாக உள்ளே சென்று மாற்று வாகனம் தயார் செய்து கூலித் தொழிலாளர்கள் மூலம் மூடைகளை மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். ஆனால் உள்ளே சென்று திரும்பி வருவதற்குள் லாரி மொத்தமாக அருகிலிருந்த கிணற்றுக்குள் புதைந்து விட்டது.

25 டன் சர்க்கரையுடன் லாரி உள்ளே முழுவதுமாக மூழ்கி உள்ளது. வெளியே எந்தவித அடையாளமும் தெரியாத அளவிற்கு கிணறால் சூழப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையில் மெயின் ரோடு அருகே நுகர்பொருள் வாணிபக் கிடங்கு உள்ளது. அதன் அருகே மெயின் ரோட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

எனவே தாழையூத்து போலீஸார் உடனடியாக மெயின் பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளனர். மின்வாரிய தொழிலாளர்கள் மின்சார இணைப்பை துண்டித்து லாரியை மீட்பதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கனரக லாரி மூழ்கும் அளவிற்கான கிணறு யாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்து அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.

லாரி ஓட்டுநர் மாற்று ஏற்பாடு செய்வதற்காக சென்ற நிலையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். கனரக கிரேன் மற்றும் தீயணைப்புத்துறை உதவியுடன் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x