

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் 23-ம் தேதி நடைபெறும் பேரணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (டிச.21) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வருகிறது. இதுவரை 16 முறை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு சுமுகமான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய பெருமையும், பாரம்பரியமும் கொண்ட இந்திய நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும், வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதற்கும் மதவாத அரசியல் என்கிற விஷ வித்து நீண்டகாலமாக ஆர்எஸ்எஸ் ஜனசங்கம், பாஜக என்கிற பெயரில் விதைக்கப்பட்டு வருகிறது.
இதனால் மத நல்லிணக்கம் சீர்குலைக்கப்பட்டு சிறுபான்மையின மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் சகிப்புத்தன்மையோடு இருந்த நாட்டு மக்கள், சமீபத்தில் பாஜக நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மத வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரண்டு கடுமையாக எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டுள்ளன.
1955 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டம் மதத்தின் அடிப்படையில் கொண்டு வரப்படவில்லை. ஆனால், 2019-ல் மதத்தின் அடிப்படையில் பாஜக அரசு கொண்டு வருவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? இச்சட்டத்தின் மூலம் மதங்களையும், நாடுகளையும் தேர்வு செய்ததில் அப்பட்டமான மதப் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானதாகும்.
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில், மத்திய அரசின் உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின்படி, அண்டை நாடுகளில் இருந்து துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக இதுவரை வந்துள்ளவர்கள் மொத்தம் 31 ஆயிரத்து 313 பேர் தான் என்று கூறுகிறது. இவர்களுக்கு தற்போது இருக்கிற சட்டத்தின்படி குடியுரிமை வழங்குவதைத் தவிர்த்து விட்டு 130 கோடி ரூபாய் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்துகிற படுபாதகச் செயலை பாஜக அரசு செய்ய முயல்வது ஏன்? இதில் பாஜகவின் அரசியல் உள்நோக்கம் என்ன என்பதை நாட்டு மக்கள் அறிய விரும்புகிறார்கள். விளக்கம் கூற பாஜக முன்வருமா?
கடந்த சில நாட்களாக, தலைநகர் டெல்லியில் இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு அருகில் மிகப்பெரிய பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்பதைத் தடுக்க 17 மெட்ரோ ரயில் நிலையங்களை பாஜக அரசு மூடியுள்ளது. சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றையும் மீறி நாள்தோறும் தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா போன்ற பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் ஓரணியில் திரண்டு பாஜக அரசின் பாசிச சட்டத்தை கடுமையாக எதிர்த்து களம் கண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் பாஜக - அதிமுக தவிர்த்து அனைத்துக் கட்சியினரும், தங்களது எதிர்ப்பை போராட்டங்கள் மூலம் பதிவு செய்து வருகிறார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 54 அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அடக்குமுறையை பாஜகவின் எடுபிடி அரசான அதிமுக அரசு ஏவிவிட்டிருக்கிறது.
தமிகத்தில் எழுந்து வரும் கடும் எதிர்ப்பை ஒருமுகப்படுத்துகிற வகையில் வருகிற வரும் 23-ம் தேதி, சென்னையில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் பாஜக ஆட்சியாளர்களுக்கு உணர்த்துகிற வகையில் இந்தப் பேரணியில் பெருமளவில் அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டு பங்கேற்க இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இச்சட்டத் திருத்தம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதுதான்.
மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துகிற பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறவுள்ள இக்கண்டனப் பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கில் மூவர்ணக் கொடியுடன் மிகுந்த எழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்கப்பட்டதைப் பறிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிற பாஜக அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்டுகிற வகையில் கண்டனப் பேரணி அமைய வேண்டும். இப்பேரணியின் மூலம் சென்னை நகரமே திணறியது என்கிற வகையில் பெருமளவில் அணி அணியாய், அலை அலையாய் திரண்டு வர வேண்டுமென அனைத்துத் தரப்பு மக்களையும் அன்போடு வேண்டுகிறேன்" என கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.