

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் சிக்கிப் போராடி வரும் தமிழக லாரி ஓட்டுநர்களை மீட்பது அரசின் கடமை என, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மெக்காலா கிராமத்தில் அமைச்சர் தங்கமணி நேற்று (டிச.20) இரவு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர், அவரிடம், காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகரில் சிக்கியுள்ள தமிழக லாரி ஓட்டுநர்களை மீட்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழக லாரி ஓட்டுநர்களை மீட்பது தமிழக அரசின் கடமை எனத் தெரிவித்தார். மேலும், அவர்களை மீட்பது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
"மெட்டாலாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமார் என்பவர், காஷ்மீர் பனிப்பொழிவில் சிக்கியுள்ளார். அவருக்குத் தேவையான சிகிச்சை மற்றும் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். முதல்வர், மத்திய அரசுடன் பேசி, மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியிருக்கிறார். மாவட்ட ஆட்சியரும் பேசியிருக்கிறார். செந்தில்குமார் உட்பட தமிழக லாரி ஓட்டுநர்களை பத்திரமாக தமிழக அரசு மீட்கும்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.