திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர்.

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டதில் திமுக, காங். கட்சிகள் இரட்டை வேடமிடுகின்றன- திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலச் செயலாளர் கருத்து

Published on

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதில், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன என திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், அதில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை கண்டித்தும், பாஜக சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் பேசியதாவது:

குடியுரிமை திருத்த சட்டத்தில் இந்தியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் தங்களை முஸ்லிம் நாடுகள் என்று அறிவித்துள்ளன. இதனால், அங்கு முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் வர வாய்ப்பில்லை. இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள்தான் அந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். எனவேதான், அவர்களுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்தையும் பாஜக செய்து வருகிறது. பாஜக தலைமையிலான ஆட்சியும், பிரதமர் மோடியும் சரியான திசையில் செல்வதை நாட்டு மக்கள் புரிந்திருக்கின்றனர். உலக நாடுகள் முழுவதும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், இங்குள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இரட்டை வேடம் போடுகின்றன. இவர்களையும் மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.

மக்களிடம் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்துதான், உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைப்பதற்காக திமுகவினர் நீதிமன்றங்களைத் தேடி அலைகின்றனர். தேர்தலில் நின்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை திமுகவுக்கு இல்லை. மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களை நம்பாமல் பிரசாந்த் கிஷோரை நம்பத் தொடங்கிவிட்டார். திமுகவால் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன், கோட்டப் பொறுப்பாளர்கள் சிவசுப்பிரமணியன், இல.கண்ணன், சிவசாமி, ஆர்எஸ்எஸ் கோட்டத் தலைவர் செல்லதுரை, விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், திருச்சி மாவட்டத் தலைவர் தங்க.ராஜையன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in