

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு இப்போது என்ன அவசரம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிடர் கழகம் சார்பில் திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான காரை சி.மு.சிவம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு காரைக்கால் திருநள்ளாறு சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். திராவிடர் கழக காரைக்கால் மண்டலத் தலைவர் ஜி.கே.நாராயணசாமி வரவேற்றார்.
இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியது:
ஒரு சட்டத் திருத்தம் நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத் தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு இப்போது என்ன அவசரம் என தெரியவில்லை.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. எந்த ஆட்சி வந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை எளிதில் மாற்ற முடியாது. காங்கிரஸ் ஆட்சியின்போது 8 சதவீதமாக இருந்த ஜிடிபி, இப்போது 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், பல்வேறு நிறுவனங்கள் மூடல், நாளுக்கு நாள் வீழ்ச்சியை சந்தித்து வரும் பொருளாதார நிலை ஆகியவை குறித்து பிரதமர் மோடி கவலைப்படவில்லை. நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை இந்த அரசு திசை திருப்புகிறது என்றார்.
தி.க துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், புதுச்சேரி தி.க தலைவர் சிவ.வீரமணி, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம், எம்எல்ஏ கீதா ஆனந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலச் செயலாளர் அரசு.வணங்காமுடி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தி.கவினர் பேரணியாக வந்து மாநாட்டில் பங்கேற்றனர்.