Published : 21 Dec 2019 08:44 AM
Last Updated : 21 Dec 2019 08:44 AM

மணற்சிற்பி அனுபிரியா 

த.சத்தியசீலன்

மணற்சிற்பத்தில் அசத்தி வருகிறார், அரசு பள்ளியில் படிக்கும் மாணவி அனுபிரியா.கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச் சேர்ந்த சி.நந்தகுமார்-ந.திலகவதி தம்பதியின் மகள் என்.அனுபிரியா (15). கிணத்துக்கடவில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து ஹவரும், இவர் மணற்சிற்பம் வடிவமைத்தல், ஓவியம் தீட்டுதல் போன்றவற்றில் திறமைகாட்டி வருவதுடன், பல்வேறு போட்டிகளில் முதல்பரிசையும் தட்டிச் சென்றுள்ளார்.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடை
பெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், ‘இயற்கையைக் காப்போம்’ என்ற தலைப்பில் மாணவி என்.அனுபிரியா வடிவமைத்த மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதிகாரிகளின் கவனத்தையும் பெரிதாக கவர்ந்த மணற்
சிற்பம் மாணவிக்கு முதல் பரிசைப் பெற்றுத் தந்தது. மணற்சிற்பம் மட்டுமின்றி ஓவியம் தீட்டுவதிலும் வல்லவரான இவர், தனியார் பண்பலை சார்பில் கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, ரூ.20,000 ரொக்கப்பரிசு பெற்றார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த இவருக்கு, தமிழக அரசு ரூ.6,000 ரொக்கப் பரிசு வழங்கியது. இதேபோல கலா உத்சவ் கலைஇலக்கியப்போட்டியில் மாவட்டஅளவில் இரண்டா
மிடமும், கலையருவி போட்டியில் மணற்சிற்பம் வடிவமைப்பில் மாவட்ட அளவில் முதலிடமும், புலிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் மூன்றாமிடமும் பிடித்துள்ளார்.

இது குறித்து மாணவி என்.அனுபிரியா கூறியதாவது: சிறு வயது முதலே ஓவியம் தீட்டுவதில் எனக்கு ஆர்வம் இருந்து வந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியம் தீட்டுவதிலேயே செலவிடுவேன். என்னுடைய ஆர்வத்தை அறிந்து கொண்ட ஓவிய ஆசிரியைகள் எஸ்.கௌசல்யா, எஸ்.ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் ஓவியம் தீட்டுதல் மட்டுமின்றி, மணற்சிற்பம் வடிவமைக்கவும் பயிற்சி அளித்தனர். சார்ட்பேப்பர் மற்றும் பானைகள், குடுவைகளில் ஓவியம் வரைந்து வருகிறேன். எனக்கு ஏற்கெனவே ஓவியம் வரையத் தெரியும்
என்பதால், மணற்சிற்பம் வடிவமைப்பதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. இதனால் என்னுடைய கற்பனைத்திறன் மேலும்
வளர்ந்தது. ஓவியமாக வரைந்தவற்றை யெல்லாம், மணற்சிற்பமாக வடிவமைத்தேன். இதனால் போட்டிகளில் எனக்கு இரட்டைப் பரிசு கிடைத்தது.

இயற்கையைப் பாது காப்போம், உலக அமைதி, மகாத்மா காந்தி, புத்தர் போன்றவை எனக்கு பரிசு பெற்றுத் தந்த மணற்சிற்பங்
களில் குறிப்பிடத்தக்கவை. பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த மணற்சிற்பத்தை அடுத்த போட்டியில் வடிவமைக்க திட்டமிட்டுள்
ளேன். மணற்சிற்பம் வடிவமைப்பது எளிது என்றாலும், செல்லும் இடங்களுக்கெல்லாம் மணலை மூட்டைகளில் கட்டி எடுத்துச் செல்வது மட்டுமே எங்களுக்கு சிரமமாக இருக்கும். மணலை எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பரப்பி விட்டால் போதும், ஒரு மணிநேரத்துக்குள் சிற்பமாக வடிவமைத்து, வண்ணக் கோலப்பொடி தூவினால், அச்சிற்பம் உயிர் பெற்றுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மணற்சிற்பம் மற்றும் ஓவியம் தீட்டுவதில் அசத்தி வரும் மாணவி என்.அனுபிரியாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கிருஷ்ணமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர்கள் எம்.பழனிசாமி, டி.சரவணன், வி.மேகலா மற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x