

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கைது செய்யச் சென்ற காவல் துறையினரை தாக்கிவிட்டு சாராய வியாபாரிகள் தப்பி ஓடிவிட்டனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள புதுவிடுதி கிராமத்தில் சாராய விற்பனை நடைபெறுவது தொடர்பாக தகவல் கிடைத்ததன்பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு போலீஸார் புதுவிடுதியைச் சேர்ந்த ராஜூ, அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் மீது கடந்த 15 தினங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்ததுடன் அப்போதே ராஜூவை கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகியோரைத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகிய இருவரும் புதுவிடுதி கடைத்தெருவில் நிற்பதாக பட்டுக்கோட்டை மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மதுவிலக்குப் பிரிவு காவலர் செந்தில்குமார், தஞ்சாவூர் ஆயுதப்படைக் காவலர் ஆல்வின் ஆகிய இருவரும் புதுவிடுதிக்குச் சென்று அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகியோரை கைது செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் உருட்டுக்கட்டையால் போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
சாராய வியாபாரிகள் போலீஸாரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் திருவோணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகியோரைத் தேடிவருகின்றனர். சாராய வியாபாரிகள் தாக்கியதில் காயமடைந்த போலீஸார் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.