Published : 21 Dec 2019 07:24 AM
Last Updated : 21 Dec 2019 07:24 AM

உள்ளாட்சித் தேர்தல் இல்லாத மலைவாழ் கிராமங்கள்: 'செட்டில்மென்ட்’ கிராமங்களை பிரிக்காததால் வாக்குரிமை மறுப்பு

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையில் அமைந்துள்ள தளிஞ்சி மலைவாழ் கிராமம்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் உள்ள மலைவாழ் கிராமங்களில் 4,500 மக்கள் வசிக்கின்றனர். இது,ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட காப்புக்காடுகள் பகுதியாகும்.

இந்த கிராமங்களை, செட்டில்மென்ட் என்பது வழக்கம். மாவடப்பு, காட்டுப்பட்டி, குழிப்பட்டி, பூச்சுக்கொட்டாம்பாறை, கருமுட்டி, மேல்குறுமலை, குறுமலை, திருமூர்த்திமலை, ஈசல்திட்டு, ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடாந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம், கரட்டுப்பதி, புளியம்பட்டி ஆகிய 18 செட்டில்மென்ட்டுகள் உள்ளன. உடலின் சிறு மச்சம்போல, நீண்ட நெடிய மேற்குத்தொடர்ச்சி மலையின் சின்னஞ்சிறிய புள்ளிதான் இந்த கிராமங்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு, பொருட்கள் வாங்க சந்தை என வாழ்வாதாரத் தேவைக்காக மட்டுமே, மலைப்பகுதியில் இருந்துகீழே இறங்குகிறார்கள். பீன்ஸ், மொச்சை பிரதானப் பயிர்கள், நெல், பாக்கு, கேரட், உருளைக்கிழங்கும் உற்பத்தி செய்கிறார்கள். யானை, காட்டெருமை, காட்டுமாடு, சிறுத்தை, உடும்பு, கரடி, ஓநாய், செந்நாய்கள், காட்டுப்பன்றி என விலங்குகளின் நடமாட்டத்துக்கும் குறைவில்லை.

"மேற்கண்ட விலங்குகள் இவர்களது பயிரை சேதப்படுத்தினாலும், அவை சாப்பிட்டதுபோக எஞ்சியதுதான் நமக்கு” என்பதை மலைவாழ் மக்கள் ஆழமாக நம்புவதால், அரசிடம் இழப்பீடும் கேட்பதில்லை. மக்களுக்கும், விலங்குகளுக்கும் எப்போதும் மோதல் போக்கு இல்லாமல் இருப்பது மற்றொரு அதிசயம்!

18 மலைவாழ் கிராம மக்களும், சட்டப்பேரவை, மக்களவைத்தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இவர்களுக்கான வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது விநோதம். உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை அளிக்க வேண்டுமென பலமுறை ஆட்சியர்களிடம் மனு அளித்தும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மலைக் கிராமங்களில் பெரும்பான்மையாக புலையர்கள், முதுவன், மலை மலசர் மக்களுமே வாழ்கிறார்கள். இதில், புலையர்கள்எஸ்.சி பிரிவிலும், முதுவன், மலைமலசர் எஸ்.டி பிரிவிலும் இருக் கிறார்கள்.

இதுதொடர்பாக அங்கு வசிக்கும் ஜி.செல்வன் கூறும்போது, “அரசு நிர்வாகம், வருவாய் கிராமங்களாக அங்கீகரிக்கப்படாமல் இருப்பதும், எங்கள் பிரச்சினைக்கு முக்கியக் காரணம். ஆங்கிலேயேர் காலத்திலேயே எங்களது மலை கிராமங்கள், அரசின் பதிவேட்டில் இருந்தும், இதுவரை உள்ளாட்சி அமைப்பு இல்லை. குடிநீர், சாலை, நீர்நிலையை கடக்க பாலம்மற்றும் கழிப்பறை வசதி இல்லை.எங்கள் கிராமங்களில் 2,200 வாக்குகள் உள்ளன” என்றார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவரும், அரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான பா.டில்லிபாபு கூறும்போது, "தமிழகத்தில் மலைவாழ் மக்கள் வாழும் எந்தப் பகுதியிலும், இதுபோன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குரிமை வழங்கப்படாமல் இருப்பதில்லை. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் காப்புக்காடுகள் தொடர்ச்சி வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதி வரை நீள்கிறது. அங்குள்ள மலைவாழ் கிராம மக்களுக்கு உள்ளாட்சி அமைப்பு உண்டு. ஆனால், இவர்களுக்கு இல்லை. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி, 1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, கிராமங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது இந்த செட்டில்மென்ட் கிராமங்களை பிரிக்காமல் விட்டுவிட்டது இப்பிரச்சினைக்கு அடிப்படை கார ணம்” என்றார்.

திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மலைவாழ் கிராமங்கள் பிரிக்கப்பட்ட போது, அருகில் உள்ள ஊராட்சிகள் மற்றும் சில கிராமங்கள் பேரூராட்சிகள் வசம் சேர்க்கப்பட்டன. இவர்களுக்கு, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசுக்கு எழுதி உள்ளோம். ஆனால், தற்போது அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. உள்ளாட்சி அமைப்பில்அவர்களுக்கான வாக்குரிமைக்காக, தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x