

துப்பாக்கியால் சுட்டு மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ அசோகனுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ-வான அசோகன் சென்னை பட்டினப்பாக்கத்தில் தனது 2-வது மனைவி ஹேமாவுடன் வசித்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது ஹேமா, கார் டிரைவருடன் சென்று வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார். இதில் மனைவி மீது சந்தேகப்பட்டு ஆத்திரமடைந்த அசோகன், மனைவி ஹேமா மற்றும் அவரது தாயாரை வீ்ட்டை விட்டு வெளியேறச் சொல்லி தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் தனது துப்பாக்கியால் சுட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் போலீஸார், அசோகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அசோகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அசோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ அசோகனுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் போலீஸார் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.