

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 3,637 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெல்ஃபேர் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, நடிகர் சித்தார்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் சித்தார்த், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது. மாணவர்களும் மற்றவர்களும் அமைதியான முறையில் போராட வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேசாமல், நமது கைகளை வன்முறைக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த இடங்களில்தான் நமது குரல் ஒலிக்க வேண்டும். நான் ஒரு மனிதனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டேன்” என்றார்.
இதேபோல் போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சாதக பாதகங்களை எடுத்துக்கூறி எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய முகமது கவுஸ், திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 637 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டத்துக்கு விரோதமாக கூடுதல் மற்றும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, நேற்று முன்தினம் பெரியார் மாணவர் கழகத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 37 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதியின்றி கூடுதல், அரசு அலுவலகத்தை முற்றுகையிடுதல், விசாரணைக்கு நேரில் ஆஜராகுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக மொத்தம் 3 ஆயிரத்து 637 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.