Published : 20 Dec 2019 09:22 PM
Last Updated : 20 Dec 2019 09:22 PM

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு ஃபாஸ்டேக் கட்டணம் வசூல்:  கோளாறுகளை சரி செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனத்துக்கு ஃபாஸ்டேக் கட்டணத்தை கழித்துள்ளனர் என பாதிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கில் ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முடிவின்படி ஃபாஸ்டேக் முறை கடந்த 15-ம் தேதிமுதல் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

ஃபாஸ்டேக் அடையாள அட்டையை பெறாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணத்தை செலுத்தினால்தான் சுங்கச்சாவடியை கடக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருமாதம் மட்டும் அபராதம் இல்லை என விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி சென்னை தி.நகரை சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஃபாஸ்டேக் அட்டை பெற்று வீட்டில் நிறுத்தபட்டிருந்த தனது காருக்கு ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும்,பாதுகாப்பான நம்பிக்கையான பணப்பரிமாற்றம் தொடர்பாக, குறுஞ்செய்தி மூலம் ஓ.டி.பி. எண்ணோ, ரகசிய குறியீட்டு எண்ணோ அனுப்பிய பின்னர்தான் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்திய த நீதிபதிகள், இதுதொடர்பாக உரிய விளக்கங்களுடன் கூடுதல் மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x