ரஜினிக்கு கமல் பரவாயில்லை: சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் பேட்டி

ரஜினிக்கு கமல் பரவாயில்லை: சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் பேட்டி
Updated on
1 min read

‘‘ரஜினியுடன் ஒப்பிடுகையில் கமல் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்,’’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தந்திருக்க மாட்டார். ஆனால் தற்போது உள்ள அதிமுக அரசு பாஜக எந்த சட்டம் கொண்டு வந்தாலும் ஆதரவு கொடுக்கிறது. பாஜகவின் கைக்கூலியாக மாறிவிட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நடக்கும் போராட்டத்திற்கு தலைமை கிடையாது. இதனால் இந்த போராட்டம் வெற்றிகரமாக மாறும். இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பலதரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் காக்கையின் நிறம் வெள்ளை என்று கூட சட்டம் நிறைவேற்றுவர். இந்தி பேசாதவர்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று கூட சட்டம் இயற்றுவர்.

கமல்ஹாசன் மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டவர். பல விசயங்களில் அவருடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ரஜினி அப்படி இல்லை. அவர் எதையும் வெளிப்படுத்துவது கிடையாது. இருவரையும் ஒப்பிடுகையில் கமல்ஹாசனின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

ரஜினி கூறிய ஆட்சி மாற்றம் நிகழும் ஆனால் அது திமுக தலைமையில் தான் அமையும். ஜிஎஸ்டி வரியை மாநிலங்களுக்கு மத்திய அரசு திருப்பி வழங்கவில்லை. இது ஒரு திவாலான அரசு. நாட்டு மக்கள் விரும்பிய அரசு வேறு. ஆனால் தற்போது அமித்ஷா-மோடி அரசாக மாறிவிட்டது, என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in