

சமூகவலைதளங்களில் வெளியான அதே வேதியியல் வினாத்தாள் அரையாண்டுத் தேர்வில் கொடுக்கப்பட்டதால் பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 2-ம் பருவத் தேர்வும், 9 மற்றும் 10 -ம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வும் டிச. 13 முதல் டிச.23-ம் தேதி வரை நடக்கின்றன. அதேபோல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிச.11 முதல் டிச.23-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடக்கிறது.
இத்தேர்வுகளில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்திலும் ஒரே மாதிரியான வினாத்தாள் மட்டுமே இடம்பெற வேண்டுமென அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. இதற்காக அரசு தேர்வுத்துறை தமிழ்வழி, ஆங்கிலவழி வினாத்தாளை ஒரே மாதிரியாக வடிவமைத்து அச்சங்கங்களுக்கு நேரடியாக அனுப்பி வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டன.
அவை அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்வு நாளன்று பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் பிளஸ் 2 வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சிலதினங்களுக்கு முன் வேதியியல் வினாத்தாள் வெளியானது. இதுகுறித்த இந்து தமிழ் நாளிதழில் டிச.19-ம் தேதி செய்தி வெளியானது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனால் சமூகவலைதளங்களில் வெளியான வினாத்தாளுக்கு பதிலாக வேறு வினாத்தாள் கொடுக்கப்படும் என மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறி வந்தனர். ஆனால் இன்று வேதியியல் தேர்வில் சமூகவலைதளங்களில் வெளியான அதே வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் கூறியதாவது:
சமூகவலைதளங்களில் வெளியான வினாத்தாள் தேர்வில் வழங்கப்பட மாட்டாது என மாணவர்களிடம் கூறிவந்தோம். ஆனால் அதே வினாத்தாளை தேர்வில் வழங்கியதால் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் மதிப்பிடுவதிலும் சிரமம் ஏற்படும்.
அரசுத் தேர்வுத்துறை இப்பிரச்சினையை சாதாரணமாக விட்டுவிட்டது. இதேநிலை நீடித்தால் இனிவரும் காலங்களில் தேர்வு மீதான நம்பிகையே சிதைந்துவிடும், என்று கூறினர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வினாத்தாளை மாற்றும் அதிகாரம் அரசு தேர்வுத்துறைக்கு தான் உள்ளது,’ என்று கூறினார்.