Published : 24 Aug 2015 05:31 PM
Last Updated : 24 Aug 2015 05:31 PM

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர்: ராமதாஸ் வலியுறுத்தல்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மதுரை விமான நிலையத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இக்கோரிக்கையை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றாதது மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் தருகிறது.

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள், அரசு கட்டிடங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற தலைவர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இக்கோரிக்கையை நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், ஏனோ இதை ஏற்பதை மத்திய, மாநில அரசுகள் தாமதப்படுத்துகின்றன. இதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டப்படுவது அனைத்து வகைகளிலும் பொருத்தமானதாக இருக்கும். தேச விடுதலைக்கு போராடிய நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியதில் தொடங்கி தலித்துகளின் ஆலய நுழைவுக்கு உதவியது& நிலம் வழங்கியது என பல நன்மைகளை செய்துள்ளார்.

அவரது சிறப்பை போற்றும் வகையில் தான் ஆண்டு தோறும் தேவர் குருபூஜை அரசு நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். இவ்வாறு அனைத்துத் தரப்பினராலும் போற்றப்படும் தலைவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் என்ன தடை இருக்க முடியும்? எனத் தெரிய வில்லை.

நாடாளுமன்றத்திலும் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டதன் பயனாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரைச் சூட்டுவதற்கு கடந்த 2001 ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், எனது நண்பருமான சரத் யாதவ் நாடாளுமன்றத்திலேயே இதற்கான வாக்குறுதியை அளித்தார்.

ஆனால், அப்போதைய அ.தி.மு.க. அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தேச விடுதலைக்கு பங்களித்த ஒரு தலைவருக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டியது அரசின் கடமை. எனவே, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். பசும்பொன் பெருமகனாரின் 108 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 53 ஆவது குருபூஜை வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அன்று இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ராமதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x