

கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த 758 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 7 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 422 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் உள்ள 1,685 பதவிகளுக்கு 4,908 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனையில் 83 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 4,825 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தாந்தோணி ஒன்றியம் ஏமூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக கரூர் தெற்கு நகரச்செயலாளர் விசிகே ஜெயராஜின் சகோதரரும், கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணித் தலைவருமான விசிகே பாலகிருஷ்ணன், க.பரமத்தி ஒன்றியம் நெடுங்கூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜெகதாம்பாள் ஆகியோரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் அவர்கள் இருவரும் போட்டியின்றி ஊராட்சித் தலைவராகத் தேர்வானார்கள்.
கடவூர் ஒன்றியம் காளையப்பட்டி ஊராட்சியில் ஆரோக்கிய மேரி, நிர்மலா என இருவர் மனுத்தாக்கல் செய்த நிலையில், நிர்மலாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஆரோக்கிய மேரி போட்டியின்றித் தேர்வானார்.
2 ஊராட்சிகளில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததாலும், ஒரு ஊராட்சியில் இருவரில் ஒருவர் வேட்பு மனு தள்ளுபடியானதாலும் 3 ஊராட்சித் தலைவர்கள் வேட்பு மனு பரிசீலனையின்போது போட்டியின்றித் தேர்வாகினர்.
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான நேற்று மேலும், 4 ஊராட்சிகளில் ஒரு வேட்பாளரைத் தவிர மற்றவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதனால் மேலும் 4 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வாகினர். இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் 7 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் உள்ள 1,401 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 3,441 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதில் 45 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று 320 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். மேலும், 57 வார்டுகளில், ஒருவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. இதனால் 422 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளுக்கு 23 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிகளுக்கு 204 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 211 பேரும், ஊராட்சி வார்டு பதவிகளுக்கு 320 பேரும் என மொத்தம் 758 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
மொத்தமுள்ள 1,685 பதவிகளில் 7 ஊராட்சித் தலைவர், 422 வார்டு உறுப்பினர் பதவிகள் என, மொத்தம் 429 பேர் போட்டியின்றித் தேர்வானதால், 12 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகள், 115 ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிகள்,150 ஊராட்சித் தலைவர் பதவிகள், 979 வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 1,256 பதவிகளுக்கு மட்டுமே மாவட்டத்தில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.