

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள திமுகவின் பேரணியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று தமாகா நிர்வாகி யுவராஜா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், ''வருகின்ற 23-ம் தேதி அன்று சென்னையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரணி நடைபெறுவதாகவும் அதற்கு அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளம் மூலம் அவர்கள் இயக்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பில் போராட்டத்தைக் கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயது முதிர்ந்தவர்களை வீட்டிலேயே விட்டு வரும்படி உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது ஏதோ திட்டமிட்டு, அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இன்னும் பிற மதத்தினர் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்ற வேளையில் வடகிழக்கு மாநிலம் போல் தமிழகத்தை கலவரக் காடாக மாற்ற, தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயலாக அவரது அழைப்பு தோன்றுகிறது.
திமுக ஆட்சிக்கு வர இயலாத சூழல் தமிழகத்தில் உள்ளது. அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழக இளைஞர்களிடையே தவறான பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் வன்முறை வெறியாட்டத்தை தூண்டி பல இளைஞர்களின் உயிரிழப்பிற்கும் அவர்களின் எதிர்கால வாழ்வினை வீணடித்ததற்கும் திமுக காரணம். அதேபோல் மீண்டும் தமிழக இளைஞர்கள், சிறுபான்மை சகோதர்களின் வாழ்க்கையை உங்களுடைய ஓட்டு வங்கிக்காக சீரழிக்க வேண்டாம். இந்த வன்முறையைத் தூண்டுகிற வகையில் நடைபெற உள்ள பேரணியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்'' என்று யுவராஜா தெரிவித்துள்ளார்.