

பிரதமரான பிறகு நரேந்திர மோடி முதல்முறையாக சென்னைக்கு நாளை வருகிறார். இங்கு கைத்தறித் துறை விழாவில் பங்கேற்கஉள்ளார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் தேசிய கைத்தறி தின அறிவிப்பு விழாவும் கைத்தறிக் கண்காட்சியும் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். பிரதமரான பிறகு, அவர் சென்னைக்கு வருவது இது முதல்முறை. ஏற்கெனவே ஒருமுறை வந்தபோது, விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஸ்ரீஹரிகோட்டா சென்றுவிட்டார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சென்னைக்கு வந்து விமான நிலையம், நிகழ்ச்சி நடக்கும் சென்னை பல்கலைக்கழக வளாகம், பிரதமர் வந்து செல்லும் பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பிரதமர் செல்லும் பாதையில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகள் நாளை மட்டும் நிறுத்திவைக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலை யம்,சென்னை பல்கலைக்கழக வளாகங்களில் மத்திய மற்றும் தமிழக போலீசார் பல அடுக்கு களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இப்பகுதி களில் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் படுகின்றன. விமான நிலையம் முதல் பல்கலைக்கழக வளாகம் வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மது ஒழிப்பு போராட்டம் நடக்கும் நேரத்தில், பிரதமர் வருவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.