

புத்தாண்டு, உள்ளாட்சித் தேர்தல், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம், கிறிஸ்துமஸ் போன்ற காரணங்களுக்காக தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுவாக டிசம்பர் இறுதி வாரத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி விடுமுறை அளிக்கப்படும். தேர்வுகள் நடக்கும் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு அதுவும் இருக்காது. ஆனால் சமீப நாட்களாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர் போராட்டம் வலுத்து வருகிறது.
தினமும் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் போராட்டம் வெடித்து வருகிறது. சென்னையில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி, புதுக்கல்லூரியில் போராட்டம் நடந்தது. அது மற்ற கல்லூரிகளுக்கும் பரவியது.
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை பல்கலைக்கழகம் முதலில் ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறையை அறிவித்தது. அதன் பின்னர் மாநிலக்கல்லூரி ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை என அறிவித்தது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1-ம் தேதிவரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அந்தந்த நிர்வாகங்களுக்கு உயர்கல்வித் துறைச் செயலர் மங்கத்ராம் ஷர்மா கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் வேலை நாட்களை அடுத்துவரும் சனிக்கிழமைகளில் ஈடுகட்டிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.