

விருதுநகரில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 23 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 27.12.19 அன்று ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 10 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளுக்கும், 103 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 194 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், 1554 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், 1028 வாக்குச்சாவடி மையங்களில் நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்டமாக 30.12.19 அன்று அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் சாத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில், 10 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளுக்கும், 97 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 256 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும் 1818 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் 1114 வாக்குச்சாவடி மையங்களில் நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது.
விருதுநகரில் மொத்தமாக, 20 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 200 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 450 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 3372 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 4042 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இதில் 23 ஊராட்சித் தலைவர்களும், 1029 வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்