

காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் தமிழக லாரி ஓட்டுநர்களை மீட்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (டிச.20) வெளியிட்ட அறிக்கையில், "ஆப்பிள் ஏற்றி வருவதற்காக காஷ்மீர் சென்ற தமிழக லாரி ஓட்டுநர்கள் 900-க்கும் மேற்பட்டோர் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி, கடந்த 13 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு காஷ்மீரில் இருந்து ஆப்பிள் ஏற்றி வருவதற்காக சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட லாரிகள் கடந்த நவம்பர் 10-ம் தேதி புறப்பட்டன. அவை ஆப்பிள் ஏற்றிக் கொண்டு கடந்த 7-ம் தேதி காஷ்மீரின் சோபியான் பகுதியிலிருந்து புறப்படவிருந்த நேரத்தில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது.
அதனால் காஷ்மீரில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ராணுவத்தினரின் உதவியுடன் சாலைகளில் பனி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. எனினும் போக்குவரத்தை முழுமையாகச் சீரமைக்க முடியாத நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை மட்டும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற அனுமதித்த காஷ்மீர் அரசு, லாரி உள்ளிட்ட வாகனங்கள் வெளியேற அனுமதிக்கவில்லை.
இதனால் தமிழகத்திலிருந்து சென்ற 450-க்கும் மேற்பட்ட லாரிகளின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என 900-க்கும் மேற்பட்டோர் காஷ்மீரில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று 40 நாட்களுக்கு மேலாகிவிட்டதால், எடுத்துச் சென்றிருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டன.
காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதியில் முடக்கப்பட்டிருக்கும் அவர்கள் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடுமையான பனிப்பொழிவில் சிக்கியுள்ள அவர்களில் பலருக்கு மோசமான உடல்நலக் குறைவும் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவம் எடுத்துக் கொள்வதற்கான வசதிகளும் இல்லாததால் அவர்களின் அவதி அதிகரித்துள்ளது.
பனிப்பொழிவால் சாலைகள் மூடப்படும் சூழலில் முடிந்தவரை சாலைகளைச் சீரமைத்து முன்னுரிமை அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் வெளியேற வசதி செய்து தருவது இயல்பானதுதான். அதில் தவறு இல்லை. ஆனால், சரக்குந்து வாகனங்களை 13 நாட்களுக்கும் மேலாக முடக்கி வைப்பது நியாயமல்ல.
லாரி ஓட்டுநர்களில் பலர் வயது முதிர்ந்தவர்களாகவும், உடல் நலக்குறைவு கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும். அவர்களால் எத்தனை நாட்களுக்குத்தான் பனிப்பொழிவை தாங்கிக் கொண்டு இருக்க முடியும்? என்பதை காஷ்மீர் அரசு நிர்வாகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காஷ்மீரில் பெரும்பான்மையான சுற்றுலா வாகனங்கள் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் லாரிகளை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இல்லாவிட்டாலும் அணி அணியாகவாவது லாரிகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
அதுவரை லாரி ஓட்டுநர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை காஷ்மீர் அரசு வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசிடமும், காஷ்மீர் ஆளுநரிடமும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.