Published : 20 Dec 2019 10:14 AM
Last Updated : 20 Dec 2019 10:14 AM

‘வாக்கு அளிப்பது எங்கள் கடமை; நல்ல நிர்வாகம் அளிப்பது உங்கள் கடமை’- வாக்குகளுக்கு பணமோ, பரிசுப்பொருளோ வேண்டாம்; வேங்கிக்கால் ஊராட்சி பொதுமக்கள் அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது

‘‘வாக்களிப்பது எங்கள் கடமை, நல்ல நிர்வாகம் அளிப்பது உங்கள் கடமை’’ எனக் கூறி வாக்களிக்க பணம் மற்றும் பரிசுப் பொருள் அளிக்க வேண்டாம் என வேங்கிக்கால் ஊராட்சி மக்களின் அறிவிப்பு வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது. சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலை விட, உள்ளாட்சித் தேர்தல் சற்று வித்தியாசமானது. அதிலும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி என்பது கவுரமானதாக காலம் காலமாக கருதப்படுகிறது.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பிடிக்க கிராம முக்கிய பிரமுகர்கள் தனி கவனம் செலுத்துவது வழக்கம். இதற்காக, கிராம மக்களுக்கு பல்வேறு பரிசுப் பொருள் மற்றும் ரொக்கப் பணத்தை வாரி வழங்குவார்கள். தேர்தல் பிரச்சராம் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் போது பல லட்ச ரூபாயை செலவழிப்பார்கள். இதனால், உள்ளாட்சித் தேர்தல் என்றால், கிராம மக்களுக்கும் மகிழ்ச்சிதான். அதிலும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை, பெரும்பாலான மக்கள் வரவேற்கின்றனர்.

இந்நிலையில், ‘‘வாக்கு அளிப் பது எங்கள் கடமை, நல்ல நிர்வா கம் அளிப்பது உங்கள் கடமை’’ என்ற தலைப்பில் திருவண்ணா மலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியின் பல்வேறு இடங் களில் அறிவிப்பு பேனர் வைக்கப் பட்டுள்ளது. அதில், “அன்பான வேண்டுகோள், வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம். எங்கள் வாக்குகளுக்கு அன்பளிப்பாக பணமோ மற்றும் பரிசுப் பொருளோ வழங்க வேண்டாம். வாக்கு அளிப்பது எங்கள் கடமை, நல்ல நிர்வாகம் அளிப்பது உங்கள் கடமை” இப்படிக்கு வேங்கிக்கால் ஊராட்சி பொதுமக்கள் என குறிப் பிட்டுள்ளனர். இது அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x