Last Updated : 20 Dec, 2019 10:08 AM

 

Published : 20 Dec 2019 10:08 AM
Last Updated : 20 Dec 2019 10:08 AM

நிலையான வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய நாடு முழுவதும் அடுத்த ஆண்டு கணக்கெடுப்பு

நாட்டின் நிலையான வளர்ச்சி குறித்து முதல்முறையாக ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக வரும் ஜனவரி முதல் கணக்கெடுப்பு தொடங்குகிறது.

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் செயல் அமலாக்க அமைச்சகத்தின் கீழ் கோவையில் இயங்கிவரும் தேசிய புள்ளி விவர அலுவலகம் (களப்பணிகள்) சார்பில், புள்ளி விவரம் சேக ரிப்பு மற்றும் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு நடந்த 3 நாள் பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

இது குறித்து தேசிய புள்ளி விவரஅலுவலக முதுநிலை புள்ளியியல் அலுவலர் ஆ.சாக்ரடீஸ் கூறிய தாவது:

தேசிய புள்ளி விவர அலுவலகம், 78-வது சமூக, பொருளாதார ஆய்வை வரும் 2020 ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை, ‘உள்நாட்டு சுற்றுலா செலவினங்கள் மற்றும் பலவகை காரணிகள்’ என்ற தலைப்பில் மேற்கொள்ள உள்ளது.

மத்திய அரசின் சுற்றுலாத்துறை, ‘டூரிசம் சேட்டிலைட் அக்கவுண்ட்’ என்ற சுற்றுலா பங்களிப்பு கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய மொத்த உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு மற்றும் வருவாயை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

‘டூரிசம் சேட்டிலைட் அக்க வுண்ட்’ குறித்து கடந்த 2002-2003-ல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, தேசிய வருவாய், உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து ஆராய்ந்து, அது குறித்த தரவுகள் சேகரித்து மத்திய சுற்றுலாத்துறையிடம் சமர்ப்பித்தோம்.

2014-15-ம் ஆண்டு தேசிய அளவில் புள்ளி விவரம் மேற்கொண்டோம். அதில் தேசிய உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு 5.8 சதவீதம் என்பதும், வேலை வாய்ப்பு 8.27 சதவீதம் என்பதும் கண்டறியப்பட்டது.

பங்களிப்பில் மகாராஷ்டிரா முதலிடமும், உத்தரப்பிரதேசம் இரண்டாமிடமும், தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளன.

தமிழகத்தில் 100 குடும்பங் களில் 22 குடும்பங்கள் சுற்றுலா செல்கின்றன.

மே, ஜூன், அக்டோபர் ஆகிய மாதங்களில் சுற்றுலா செல்வது அதிகம். போக்குவரத்துக்கு பெரும்பா லும் பேருந்தையே பயன்படுத்துகின் றனர். இதை மேலும் அதிகரித்தால் நாட்டின் மொத்த உற்பத்தி இன்னும் அதிகரிக்கும்.

இதுபோன்ற கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு புள்ளி விவரங்கள் சேகரித்து அளிக்கும்போது, மத்திய அரசு அதற்கேற்ப திட்டங்கள் வகுத்து, அதை மேம்படுத்த நட வடிக்கை மேற்கொள்ளும்.

இதேபோல பலவகை காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஏழ்மை, பசி, பாலின பாகுபாடு, வீடுகளில் கழிப்பறை உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப் பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

14,500 கிராமங்கள்

கோவை தேசிய புள்ளி விவரஅலுவலக (களப்பணிகள் கோட் டம்) உதவி இயக்குநர் ரிச்சி ரச்சல் மேத்யூ கூறும்போது, “நாட்டின் நிலையான வளர்ச்சிக்கான காரணிகள் பற்றி தேசிய மாதிரி ஆய்வு முதல்முறையாக மேற்கொள்ளப்பட உள்ளது. 2030-க்குள் இதற்கான காரணிகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இடம் பெயர்வு, 2014-15 முதல் வீடுகள் கட்டுமானம் பற்றிய தகவல்கள் இவ்வாய்வின் மூலம் சேகரிக்கப்படும். தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், ஒரே மாதிரியான மாதிரி வடிவமைப்பு மற்றும் படிவங்களில் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

அகில இந்திய அளவில் 14,500 கிராமங்கள், 15,524 நகர்ப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளால் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1,608 கிராம, நகர்ப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பயிற்சி பெற்ற அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு தகவல் சேகரிப்பர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x