பாஜக கருத்து; இன்னும் ஏன் முகமூடி? - ரஜினி கருத்துக்கு ஜோதிமணி பதிலடி

பாஜக கருத்து; இன்னும் ஏன் முகமூடி? - ரஜினி கருத்துக்கு ஜோதிமணி பதிலடி
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக ரஜினியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், ரஜினி ஏன் இது தொடர்பாக ஏன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு (டிசம்பர் 19) ரஜினி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள கடிதத்தில், "எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

மாணவர்கள் எங்கு வன்முறை செய்கிறார்கள் என்று பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்குப் பிறகு ரஜினி பேசியதன் மறுபதிப்பே இது. மக்களின் அடையாளங்கள், உரிமைகள், உணர்வுகள் அழித்தொழிக்கப்படுவதும், மாணவர்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறையும் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல! அச்சு அசல் பிஜேபி கருத்து. இன்னும் எதற்கிந்த முகமூடி?!" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in